Tuesday, August 3, 2010

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...
நான் தான் பனியாரம். நல்லா இருக்கியா டா. நீ எனக்கு வச்ச பட்ட பேரு இன்னும் மாறவே இல்ல. எங்கடா இருக்க...? நல்லா இருக்கியா?. நமக்குள்ள அறிமுகம் ஆனதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் நானும் நண்பர்களாக இருந்ததற்கு நம் இருவரின் மாமன்கள் தான் முதற் காரணமாக இருந்தனர். என் மாமாவும் உன் மாமாவும் மேலூரில் கக்கன் நினைவுக்குழு நடத்திய கடைசி கபடி போட்டி வரை ஜெயா கபடிகுழுவின் பிரதான வீரர்கள். அவர்கள் ஆரம்பித்த நட்பு நமக்குள்ளும் தொடர ஆரம்பித்தது.


காலையில் என் வீட்டிலிருந்து நானும் உன் வீட்டிலிருந்து நீயும் கையில ரெண்டு தூக்கு வாளிய எடுத்துக்கிட்டு செக்கடியில பாரதி டீக்கடையில் காபியும் பாஸ்கரன் ஆஸ்பத்திரி பக்கத்து பருத்தி பால் கடையில பருத்திப்பாலும் வாங்கியதில் தொடங்கிய சிநேகம். எங்க வீட்டுக்கு பக்கத்துல ஐஸ் கம்பெனி அதுக்கு பக்கத்துல செட்டியார் வீடு அதுக்கு பக்கத்து வீடு உங்க வீடு.

இதை எல்லாத்தயும் விட ஒரு நாள் காவியம் மனிக்காவியம் விளயாடிய போது உன் முதுகில் லாகு சொல்லும்போது ஓங்கி அடித்ததற்கு நீ கல்லை விட்டு எறிஞ்சு என் மண்டய உடைச்சுட்ட. ரொம்ப பயந்து போயி காபி தூள் வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தவனும் நீ தான். என் மேல ”கொக்கே கொக்கெ மந்திரம் போடு ,. ரெண்டு மைனா பார்த்தா நல்லது ஒத்த மைனா பார்த்தா கெட்டது நடக்கும்,,, கொடிக்கா பழ விதைய உரிக்கும்போது சரியா அதன் தோலை உரித்தால் நினைச்சது நடக்கும் ...ஒட்டு புல்ல உடைத்து சரியா மீண்டும் இனைத்தால் பரீட்சையில பாஸ் ஆயிருவோம் என அந்த வயது நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்தவன் நீ தான்...

ரெண்டு கோடு நோட்டுல நா எழுதிட்டு வராத நாட்களில் என்ன வாய்க்குள்ள விரல விட்டு வாந்தி எடுக்க வைத்து சத்யா மிஸ் கிட்ட காப்பாத்துவதும், உன் ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டோம். அதற்கு தண்டனையாக முட்டிக்கால் போடும் போது செருப்பை குடுத்து அதன் மேல் முட்டிக்கால் போட்டதும், நாலாவது கால் பரீட்சையில கல்கத்தாவின் விமான நிலையத்தின் பெயர் டம் டம் என நான் எழுதிக்குடுத்ததை வித்யா மிஸ் பார்த்து ரெண்டு பேருக்கும் 5 மார்க் குறைத்தது, உன் தங்கச்சி இலக்கியாவ தூக்கி கொஞ்சுரதுல எனக்கும் என் மாமா மகளுக்கும் சண்டை வரும்போது அவளின் வளையலை நான் உடைப்பது உனக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்..

நாலாவது முழு பரீட்சை லீவுல நீ சூரக்குண்டு ல உன் தாத்தா வீட்டுக்கு போயிட்ட, அப்போ அங்க இருந்து எனக்கு சித்திரை வருஷ பிறப்புக்கு வாழ்த்து அட்டை அனுப்பி இருந்த, அப்போவெல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வந்தா பெரியவங்களுக்கு மட்டும் தான் லெட்டர் வரும். எனக்கு தனி ஆளா முதன் முதலில் கடிதம் வந்தது உன்கிட்ட இருந்து தான். அன்னைக்கு நா குடுத்த அலப்பறைக்கு அளவே இருக்காது எனக்கு லெட்டர் வந்துருக்கு எனக்கு லெட்டர் வந்துருக்குனு சின்ன தம்பி படத்துல எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணாம்னு சொல்ற மாதிரி வீட்டுக்குள்ள கத்திட்டு இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னால என் மாமா மகள் கூட சண்ட போட்டு அவ வளையல் நான் உடைச்சிருந்தேன். அதுக்கு பழி வாங்குவதாக நினைத்து நீ அனுப்புன லெட்டர படக்குனு பிடுங்கி கிழிச்சு போட்டுட்டா. கோபமும் அழுகையுமாய் பதிலுக்கு அவள கடிச்சு வச்சுட்டு கிழிஞ்ச லெட்டர ஒன்னு சேர்த்து உன் முகவரியை சேர்த்தேன். எம்.ராமக்கிருஷ்ணன் சின்ன சூரக்குண்டு இது மட்டும் தான் என்னால சேர்க்க முடிஞ்சது. அத வச்சிக்கிட்டு உனக்கு லெட்டர் இப்படி தான் எழுதினேன் ..

“உனக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீ எப்ப இங்க வருவ...
போன வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பொருட்காட்சி போயிட்டு வந்தோம்...
நல்லா இருத்துச்சு..
அப்புறம் என் வெல்ட் ஆனி பம்பரக்கட்டை கொண்டையில அழகு பாண்டி நங் நங் நு நாலு ஆக்கர் வச்சுட்டான்.பதிலுக்கு நானும் அவன் கட்டய பொறிச்சுட்டேன் மற்றவை நேரில்”
என எழுதிய கடிதம் சரியான முகவரி இல்லாமல் திரும்ப எனக்கே வந்துருச்சு. நீயும் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்ட,உன்ன நேருல பார்த்தே குடுத்துட்டேன்.

நாம அஞ்சாவது போக ஆரம்பிச்சதுல இருந்து உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வந்து உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போன காரணத்தால அடிக்கடி லீவு போட ஆரம்பிச்ச. அப்பா சீட்டு விளயாட போறத அம்ம கேட்டதுக்கு அடிக்கிறாரு மாமா கேட்டாலும் சண்ட போடுறாரு...என உன் தரப்பு காரணங்கள். தூர்தர்ஷன் ல ஒரு நாள் படிக்காதவன் படம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப நானும் இது மாதிரி ஓடி போக போறேன்னு நீ சொன்னது எனக்கு பெரியதாக தெரியவில்லை ....

ஒரு நாள் சஞ்சாயிகா பணம் எல்லாருக்கும் திரும்ப பட்டுவாடா செய்யப்பட்டது. எனக்கு 52 ரூபாயும் உனக்கு 62 ம் ஞாபகம். அன்னைக்கு சாயங்காலம் என் கூட நீ வீட்டுக்கு வரல “ரைஸ் மில்லுல மாவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான் அதுக்கு பிறகு இன்று வரை நீ திரும்பவே இல்லை..”

அன்று இரவு 8 மணி என்னிடம் ஆரம்பித்த உன்னை பற்றிய விசாரனை என்னிடம் .”நீ ரைஸ்மில்லுக்கு போயிட்டு வர்றத சொன்னதை உன் மாமா கிட்ட சொன்னேன். அங்கே விசாரித்ததில் நீ பையை மட்டும் அங்கே வச்சுட்டு போனதாகவும் முத்தையா அண்ணன் சொல்லி இருக்கிறார் .தொடர்ந்து சுந்தரப்பான் கண்மாய் பெரியா ஆத்துக்கால் தெப்பக்குளம் டியூஷன் மிஸ் வீடு என உன்ன தேட ஆரம்பிச்சாங்க..

உன்னை யாரும் கடத்திட்டு போயிட்டானுங்களோனு பயந்தாங்க ,ஜாதகக்கோளாறு தான் நீ ஓடி போயிட்ட எனவும்,ஜோசியக்கார்,குறி சொல்றவர் மை பார்க்குற ஆள் என எல்லா இடத்துலயும் உன்ன கண்டு பிடிக்க முயற்சித்தும் பலன் இல்லை என உன் மாமா எங்க வீட்டுல புலம்பிகிட்டு இருப்பாரு. உன் தங்கச்சி எந்த விவரமும் தெரியாம விளயாடிக்கிட்டு இருக்கும். உன் தங்கச்சி இலக்கியாவுக்கு ஆசை சாக்லேட் பேப்பரும் சாக்பீசையும் வச்சு நீ செஞ்சு குடுத்த பொம்மையை இன்னும் பத்திரமா வச்சுருக்குது டா.

நீ போனதுக்கு அப்புறம் நல்ல பாம்பும் சாரப்பாம்புமா திரிவீங்களே உன்ன விட்டுட்டு அவன் போயிட்டானா.உன்கிட்ட சொல்லாம போயிருக்க மாட்டான் டா என என்னிடம் உன்னை பற்றிய விசாரிப்புகள் நம் தெரு பையன்களிடம் இருந்தது.உனக்காகவே சீம்பால் கொண்டுவந்த கார்த்திகா மிஸ் அதன் பிறகு கொண்டு வருவதே இல்லை...

உன் அப்பாவும் எல்லா பழக்கத்தையும் விட்டுட்டதா கேள்விப்பட்டேன். ரொம்பவே மாறி இருந்தார் உன் அம்மா தான் நீ வந்துருவ வந்துருவனு புலம்பித்தவித்த அவர் நம்பிக்கை பொய்த்துபோனது. அதன் பிறகு ஒவ்வொரு மார்ச் மாதம் 8 ம் தேதியும் உன் பிறந்த நாளில் யாருக்காவது துணி எடுத்து குடுத்து உனக்கு குடுக்குற மாதிரியே காலத்தை கழிச்சிக்கிட்டு இருக்காங்க.
உன் தங்கச்சி கார்த்திகா 12 வரைக்கும் படிச்சுச்சு. இப்போதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிவகங்கை ல இருந்து மாப்பிள்ள b.sc படிச்சுட்டு சொந்தமாக காய்கறி மண்டி வச்சுருக்காப்ள. நல்ல குணம். பேரு முத்துகுமார். கல்யாணம் முடிஞ்சுருச்சு. வீட்டுக்கு வளைகாப்புக்கு வந்தப்போ பேச்சுவாக்குல உன் புள்ளைக்கு என் மடியில வச்சு காது குத்துவீங்களானு ரெண்டு பேருகிட்டயும் கேட்டேன். சொன்ன மாதிரியே ரெண்டு மாசத்துக்கு முன்னால நம் மருமகளுக்கு என் மடியில வச்சு சிவன் கோவில்ல காதணி விழா சிறப்பா நடந்துச்சு. பிள்ளைக்கு பேரு கிருஷ்ணவேனி டா.....

என் வீட்டுக்கு நான் ஒத்த புள்ள.ஒத்த குரங்காவே வளர்ந்துட்டேன். திடீர்னு இலக்கியா மப்பிள்ள எனக்கு தாய்மாமன் பதவி குடுத்து சபையில நிப்பாட்டிடாப்ள... என் வாழ்வில் சந்தோஷத்தின் போது அழுத நாட்கள் மிக குறைவு. அதில் அந்த காதணி விழாவும் ஒன்னு டா... சத்தியமா எனக்கு அழுகையும் சந்தோஷமும் இருந்துச்சு டா... என்ன, அன்னைக்கு நிலமைக்கு என் கையில 130 ரூபாய் தான் இருந்துச்சு. அவளோட அடுத்த பொறந்த நாளுக்குள்ள அரைப்பவுனுக்கு தோடு எடுத்து போடனும்னு எண்ணம் இருக்குடா..

இது எல்லாமே உன்னால எனக்கு கிடைச்ச சந்தோசம் டா நண்பா... என இதிலும் கூட ஒரு சுயநல வாதியாக தான் நான் இருந்திருக்கிறேன். எப்படி டா உனக்கு வீட்டை விட்டு ஓடி போகனும்னு தைரியம் வந்துச்சு. உன் மனசுக்கும் திறமைக்கும் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப டா. எனக்கும் என் மாமாவோட ரெண்டாவது பொண்ணுக்கும் பேசிட்டு இருக்காங்க...முடிஞ்சா இந்த கல்யாணத்துக்காவது வந்துட்டு போடா.......


இன்னும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நண்பன் “பனியாரம்”
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/08/blog-post.html

1 comment:

soms said...

https://youtu.be/Zs0pLSSgvLE