Tuesday, August 3, 2010

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...
நான் தான் பனியாரம். நல்லா இருக்கியா டா. நீ எனக்கு வச்ச பட்ட பேரு இன்னும் மாறவே இல்ல. எங்கடா இருக்க...? நல்லா இருக்கியா?. நமக்குள்ள அறிமுகம் ஆனதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் நானும் நண்பர்களாக இருந்ததற்கு நம் இருவரின் மாமன்கள் தான் முதற் காரணமாக இருந்தனர். என் மாமாவும் உன் மாமாவும் மேலூரில் கக்கன் நினைவுக்குழு நடத்திய கடைசி கபடி போட்டி வரை ஜெயா கபடிகுழுவின் பிரதான வீரர்கள். அவர்கள் ஆரம்பித்த நட்பு நமக்குள்ளும் தொடர ஆரம்பித்தது.


காலையில் என் வீட்டிலிருந்து நானும் உன் வீட்டிலிருந்து நீயும் கையில ரெண்டு தூக்கு வாளிய எடுத்துக்கிட்டு செக்கடியில பாரதி டீக்கடையில் காபியும் பாஸ்கரன் ஆஸ்பத்திரி பக்கத்து பருத்தி பால் கடையில பருத்திப்பாலும் வாங்கியதில் தொடங்கிய சிநேகம். எங்க வீட்டுக்கு பக்கத்துல ஐஸ் கம்பெனி அதுக்கு பக்கத்துல செட்டியார் வீடு அதுக்கு பக்கத்து வீடு உங்க வீடு.

இதை எல்லாத்தயும் விட ஒரு நாள் காவியம் மனிக்காவியம் விளயாடிய போது உன் முதுகில் லாகு சொல்லும்போது ஓங்கி அடித்ததற்கு நீ கல்லை விட்டு எறிஞ்சு என் மண்டய உடைச்சுட்ட. ரொம்ப பயந்து போயி காபி தூள் வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தவனும் நீ தான். என் மேல ”கொக்கே கொக்கெ மந்திரம் போடு ,. ரெண்டு மைனா பார்த்தா நல்லது ஒத்த மைனா பார்த்தா கெட்டது நடக்கும்,,, கொடிக்கா பழ விதைய உரிக்கும்போது சரியா அதன் தோலை உரித்தால் நினைச்சது நடக்கும் ...ஒட்டு புல்ல உடைத்து சரியா மீண்டும் இனைத்தால் பரீட்சையில பாஸ் ஆயிருவோம் என அந்த வயது நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்தவன் நீ தான்...

ரெண்டு கோடு நோட்டுல நா எழுதிட்டு வராத நாட்களில் என்ன வாய்க்குள்ள விரல விட்டு வாந்தி எடுக்க வைத்து சத்யா மிஸ் கிட்ட காப்பாத்துவதும், உன் ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டோம். அதற்கு தண்டனையாக முட்டிக்கால் போடும் போது செருப்பை குடுத்து அதன் மேல் முட்டிக்கால் போட்டதும், நாலாவது கால் பரீட்சையில கல்கத்தாவின் விமான நிலையத்தின் பெயர் டம் டம் என நான் எழுதிக்குடுத்ததை வித்யா மிஸ் பார்த்து ரெண்டு பேருக்கும் 5 மார்க் குறைத்தது, உன் தங்கச்சி இலக்கியாவ தூக்கி கொஞ்சுரதுல எனக்கும் என் மாமா மகளுக்கும் சண்டை வரும்போது அவளின் வளையலை நான் உடைப்பது உனக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்..

நாலாவது முழு பரீட்சை லீவுல நீ சூரக்குண்டு ல உன் தாத்தா வீட்டுக்கு போயிட்ட, அப்போ அங்க இருந்து எனக்கு சித்திரை வருஷ பிறப்புக்கு வாழ்த்து அட்டை அனுப்பி இருந்த, அப்போவெல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வந்தா பெரியவங்களுக்கு மட்டும் தான் லெட்டர் வரும். எனக்கு தனி ஆளா முதன் முதலில் கடிதம் வந்தது உன்கிட்ட இருந்து தான். அன்னைக்கு நா குடுத்த அலப்பறைக்கு அளவே இருக்காது எனக்கு லெட்டர் வந்துருக்கு எனக்கு லெட்டர் வந்துருக்குனு சின்ன தம்பி படத்துல எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணாம்னு சொல்ற மாதிரி வீட்டுக்குள்ள கத்திட்டு இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னால என் மாமா மகள் கூட சண்ட போட்டு அவ வளையல் நான் உடைச்சிருந்தேன். அதுக்கு பழி வாங்குவதாக நினைத்து நீ அனுப்புன லெட்டர படக்குனு பிடுங்கி கிழிச்சு போட்டுட்டா. கோபமும் அழுகையுமாய் பதிலுக்கு அவள கடிச்சு வச்சுட்டு கிழிஞ்ச லெட்டர ஒன்னு சேர்த்து உன் முகவரியை சேர்த்தேன். எம்.ராமக்கிருஷ்ணன் சின்ன சூரக்குண்டு இது மட்டும் தான் என்னால சேர்க்க முடிஞ்சது. அத வச்சிக்கிட்டு உனக்கு லெட்டர் இப்படி தான் எழுதினேன் ..

“உனக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீ எப்ப இங்க வருவ...
போன வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பொருட்காட்சி போயிட்டு வந்தோம்...
நல்லா இருத்துச்சு..
அப்புறம் என் வெல்ட் ஆனி பம்பரக்கட்டை கொண்டையில அழகு பாண்டி நங் நங் நு நாலு ஆக்கர் வச்சுட்டான்.பதிலுக்கு நானும் அவன் கட்டய பொறிச்சுட்டேன் மற்றவை நேரில்”
என எழுதிய கடிதம் சரியான முகவரி இல்லாமல் திரும்ப எனக்கே வந்துருச்சு. நீயும் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்ட,உன்ன நேருல பார்த்தே குடுத்துட்டேன்.

நாம அஞ்சாவது போக ஆரம்பிச்சதுல இருந்து உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வந்து உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போன காரணத்தால அடிக்கடி லீவு போட ஆரம்பிச்ச. அப்பா சீட்டு விளயாட போறத அம்ம கேட்டதுக்கு அடிக்கிறாரு மாமா கேட்டாலும் சண்ட போடுறாரு...என உன் தரப்பு காரணங்கள். தூர்தர்ஷன் ல ஒரு நாள் படிக்காதவன் படம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப நானும் இது மாதிரி ஓடி போக போறேன்னு நீ சொன்னது எனக்கு பெரியதாக தெரியவில்லை ....

ஒரு நாள் சஞ்சாயிகா பணம் எல்லாருக்கும் திரும்ப பட்டுவாடா செய்யப்பட்டது. எனக்கு 52 ரூபாயும் உனக்கு 62 ம் ஞாபகம். அன்னைக்கு சாயங்காலம் என் கூட நீ வீட்டுக்கு வரல “ரைஸ் மில்லுல மாவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான் அதுக்கு பிறகு இன்று வரை நீ திரும்பவே இல்லை..”

அன்று இரவு 8 மணி என்னிடம் ஆரம்பித்த உன்னை பற்றிய விசாரனை என்னிடம் .”நீ ரைஸ்மில்லுக்கு போயிட்டு வர்றத சொன்னதை உன் மாமா கிட்ட சொன்னேன். அங்கே விசாரித்ததில் நீ பையை மட்டும் அங்கே வச்சுட்டு போனதாகவும் முத்தையா அண்ணன் சொல்லி இருக்கிறார் .தொடர்ந்து சுந்தரப்பான் கண்மாய் பெரியா ஆத்துக்கால் தெப்பக்குளம் டியூஷன் மிஸ் வீடு என உன்ன தேட ஆரம்பிச்சாங்க..

உன்னை யாரும் கடத்திட்டு போயிட்டானுங்களோனு பயந்தாங்க ,ஜாதகக்கோளாறு தான் நீ ஓடி போயிட்ட எனவும்,ஜோசியக்கார்,குறி சொல்றவர் மை பார்க்குற ஆள் என எல்லா இடத்துலயும் உன்ன கண்டு பிடிக்க முயற்சித்தும் பலன் இல்லை என உன் மாமா எங்க வீட்டுல புலம்பிகிட்டு இருப்பாரு. உன் தங்கச்சி எந்த விவரமும் தெரியாம விளயாடிக்கிட்டு இருக்கும். உன் தங்கச்சி இலக்கியாவுக்கு ஆசை சாக்லேட் பேப்பரும் சாக்பீசையும் வச்சு நீ செஞ்சு குடுத்த பொம்மையை இன்னும் பத்திரமா வச்சுருக்குது டா.

நீ போனதுக்கு அப்புறம் நல்ல பாம்பும் சாரப்பாம்புமா திரிவீங்களே உன்ன விட்டுட்டு அவன் போயிட்டானா.உன்கிட்ட சொல்லாம போயிருக்க மாட்டான் டா என என்னிடம் உன்னை பற்றிய விசாரிப்புகள் நம் தெரு பையன்களிடம் இருந்தது.உனக்காகவே சீம்பால் கொண்டுவந்த கார்த்திகா மிஸ் அதன் பிறகு கொண்டு வருவதே இல்லை...

உன் அப்பாவும் எல்லா பழக்கத்தையும் விட்டுட்டதா கேள்விப்பட்டேன். ரொம்பவே மாறி இருந்தார் உன் அம்மா தான் நீ வந்துருவ வந்துருவனு புலம்பித்தவித்த அவர் நம்பிக்கை பொய்த்துபோனது. அதன் பிறகு ஒவ்வொரு மார்ச் மாதம் 8 ம் தேதியும் உன் பிறந்த நாளில் யாருக்காவது துணி எடுத்து குடுத்து உனக்கு குடுக்குற மாதிரியே காலத்தை கழிச்சிக்கிட்டு இருக்காங்க.
உன் தங்கச்சி கார்த்திகா 12 வரைக்கும் படிச்சுச்சு. இப்போதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிவகங்கை ல இருந்து மாப்பிள்ள b.sc படிச்சுட்டு சொந்தமாக காய்கறி மண்டி வச்சுருக்காப்ள. நல்ல குணம். பேரு முத்துகுமார். கல்யாணம் முடிஞ்சுருச்சு. வீட்டுக்கு வளைகாப்புக்கு வந்தப்போ பேச்சுவாக்குல உன் புள்ளைக்கு என் மடியில வச்சு காது குத்துவீங்களானு ரெண்டு பேருகிட்டயும் கேட்டேன். சொன்ன மாதிரியே ரெண்டு மாசத்துக்கு முன்னால நம் மருமகளுக்கு என் மடியில வச்சு சிவன் கோவில்ல காதணி விழா சிறப்பா நடந்துச்சு. பிள்ளைக்கு பேரு கிருஷ்ணவேனி டா.....

என் வீட்டுக்கு நான் ஒத்த புள்ள.ஒத்த குரங்காவே வளர்ந்துட்டேன். திடீர்னு இலக்கியா மப்பிள்ள எனக்கு தாய்மாமன் பதவி குடுத்து சபையில நிப்பாட்டிடாப்ள... என் வாழ்வில் சந்தோஷத்தின் போது அழுத நாட்கள் மிக குறைவு. அதில் அந்த காதணி விழாவும் ஒன்னு டா... சத்தியமா எனக்கு அழுகையும் சந்தோஷமும் இருந்துச்சு டா... என்ன, அன்னைக்கு நிலமைக்கு என் கையில 130 ரூபாய் தான் இருந்துச்சு. அவளோட அடுத்த பொறந்த நாளுக்குள்ள அரைப்பவுனுக்கு தோடு எடுத்து போடனும்னு எண்ணம் இருக்குடா..

இது எல்லாமே உன்னால எனக்கு கிடைச்ச சந்தோசம் டா நண்பா... என இதிலும் கூட ஒரு சுயநல வாதியாக தான் நான் இருந்திருக்கிறேன். எப்படி டா உனக்கு வீட்டை விட்டு ஓடி போகனும்னு தைரியம் வந்துச்சு. உன் மனசுக்கும் திறமைக்கும் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப டா. எனக்கும் என் மாமாவோட ரெண்டாவது பொண்ணுக்கும் பேசிட்டு இருக்காங்க...முடிஞ்சா இந்த கல்யாணத்துக்காவது வந்துட்டு போடா.......


இன்னும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நண்பன் “பனியாரம்”
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/08/blog-post.html

வேதியியல் ஆசானுக்கு,

வேதியியல் ஆசானுக்கு,

வணக்கம் சார், என்ன ஞாபகம் இருக்கா சார்?

பனிரெண்டாவதுல எஸ்.ரெங்கசாமி பள்ளிகூடத்து ல முதல் மதிப்பெண் வாங்கினானே..அந்த செட் தான் நான்..ஏ செக்ஷன் ல கடைசி பெஞ்சுக்கு முந்துன பெஞ்சுல நடுவுல தான் நான் உட்கார்ந்து இருப்பேன்.உங்களுக்கு என்னையப் பிடிக்காது. எனக்கும் உங்களைப் பிடிக்காது, ஏன்னா நீங்க கேட்கும் மூலக்கூறு வாய்ப்பாடுகள் பெரும்பாலும் என்னை பார்த்தே இருக்கும்...இதனால் என் இருக்கையில் இருந்து கவனிச்சதை விட வாசல் நிலைக்கதவுக்கு முட்டு கொடுத்து கிளாஸ்ஸ கவனிச்ச நாட்கள் தான் அதிகம்... மேலும் நீங்க என்ன தான் நல்லா நடத்துனாலும் சிடு சிடு னு ரொம்ப கண்டிப்பான ஆள் என்பதுதான் என் வகுப்பில் இருந்த எல்லோருடைய பொது கருத்தும். நீங்க சீக்கிரமே வேலைய விட்டு போயிரனும்னு வேண்டிக்கிட்டவனுங்கள்ள நானும் ஒருத்தன்...மத்த வகுப்பில் எப்படி எல்லாமோ நாங்க இருந்த்தாலும் உங்க கிளாஸ் ல மட்டும் நாங்க அடங்கி ஒடுங்கி தான் இருப்போம்..

எப்போவும் வியாழக்கிழமை கடைசி கிளாஸ் தெய்வானை மிஸ்ஸோட தமிழ்,,ஆனால் ஏதோ முக்கியமா நடத்தனும்னு கடன் வாக்கிட்டு அன்னைக்கு வந்தீங்க.எனக்கு பின்னால காதர், சரவணன், ராம்குமார்,என் பெஞ்சுல நான் சதீஸ், கணேசன். எனக்கு முன்னால பெஞ்சுல அசோக், சிவா. செந்தில்..திடீர்னு என் சட்டய பிடிச்சு இழுத்து கையில ஒரு துண்டு பேப்பர குடுத்தான். படிச்சு பார்த்தப்போ ”லட்சுமி தியேட்டர்ல சீன் படம் போட்டுருக்காங்க உங்க பெஞ்சுல எத்தன பேரு வர்றீங்க” அப்படியே முந்துன பெஞ்சுலயும் குடுத்து கேட்க சொல்லி இருந்தது....

அன்னைக்கு சாயங்காலம் நாங்க ஒன்பது பேருல கணேசன் வரலைன்னு சொன்னான். ஏண்டானு கேட்டதுக்கு ”வீட்டு பக்கத்துல தியேட்டர் இருக்கு வந்த்தா மாட்டிக்குவேன்னு சொன்னதும் நான் தான் சொன்னேன்.,,,மகாராணி தியேட்டர்லயும் போஸ்டர் பார்த்தேன். அங்க போகலாம் ...இன்னைக்கு போனாதான் உண்டு நாளைக்கு வெள்ளிக்கிழமை படத்தை மாத்திருவாங்க” அது மட்டுமில்ல அடுத்த வாரம் அரைப்பரீட்சை வந்துரும் எங்கயும் போக முடியாதுன்னு சொன்னதால கணேசன் வருவதும் உறுதியானது.

இளயராணி மகாராணி என ரெண்டு தியேட்டர் ஓரே காம்ப்ளக்ஸில். இளயரானியில ஒரு முன்னனி நடிகரின் படமும் மகராணியில இரவு சுந்தரிகளின் போஸ்டரும் ஒட்டி இருந்தது,,,

எந்த படத்துக்கு போனாலும் சரவணனும் காதரும் தான் டிக்கெட் வாங்குவது வழக்கம்...ஆனால் இளயராணி தியேட்டருக்கு பெண்கள் கூட்டம் வருவதால் உள்ள போக சங்கடப்பட்டு கொண்டிருந்த போது தான் “கொஞ்ச நேரம் இளயராணி வாசல்ல நிப்போம் மகாராணி கவுண்டர் திறந்ததும் உள்ள போகலாம் என உட்கார்ந்தோம்...மகாராணி கவுண்டர் திறந்ததும் இளயராணியின் வாசலில் உட்கார்ந்த பாதி கூட்டம் மகாராணி கவுண்டரை நோக்கி தான்...

பசங்க எல்லோரும் தியேட்டருக்குள்ள போயிட்டாங்க..நான் மட்டும் எனக்கான டிக்கெட்டை வாங்கிட்டு சைக்கிளை நிப்பாட்ட போன போது தான் உங்களைப் பார்த்தேன்.நீங்க இளயராணிக்கு வந்துருப்பீங்க என்னப் பார்த்தா நானும் அதுக்குதான்னு சொல்லிக்குவோம்ன்னு நினைச்சேன்...நீங்க என்னய பாத்தீங்க ஆனா பேசலை,,ஒருவேளை நீங்க என்னைய இளயராணி தியேட்டர் ரசிகனாக நினைத்திருக்கலாம்....

நான் மகாரானியில் சீட் பிடித்து உட்கார்ந்த 5 ஆவது நிமிடம் தியேட்டர் காரரின் டார்ச் வெளிச்சத்தில்நீங்க. நான் சைக்கிள் ஸ்டாண்டுல நடந்தத எல்லாம் பசங்க கிட்ட சொன்னேன்...

6.30 மனி ஆயிருந்தாலும் படம் போட்ட மாதிரி இல்ல ,ஏ ஆப்பரேட்டர் என ஆப்பரேட்டரை நோக்கி ஏக வசனக்கள் வீசியது நாங்க தான்...”வந்திருக்குறது சீன் படத்துக்கு இதுல எதுக்கு இப்படி கத்துறாங்க”ன்னு பின் இருக்கையின் முனுமுனுப்புக்கள்...

எல்லா இருக்கைகளும் நிரம்பிய பின்னர் ஒருவழியாக படம் போடப்பட்டது,,,படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தான் சரவணன் கத்த ஆரம்பிச்சான் செபாஸ்டியன் சார், கெமிஸ்ட்ரி சார் வாழ்க என.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது

”டே அவரு என்ன பார்த்துருக்காருடா நீ இப்படி கத்துனா எல்லாத்துக்கும் ரிவிட்டுதான் என நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல..”அவரும் தானே படத்துக்கு வந்துருக்காரு அதுக்கு மேல ஏதாவது ஆச்சுனா பார்த்துக்கலாம்”. மேற்கொண்டு கத்த அரம்பித்தனர் எல்லோரும். டே ஆப்பரேட்டர் பிட்டு போடுயா என அவரும் திட்டு வாங்கி கொண்டிருந்தார்...எனக்கு ரொம்ப பயமாகி இருந்தது...டே இடைவேளைக்கு அப்பறம் பிட்லாம் இல்ல என எதேதோ சொல்லி எல்லாத்தயும் கிளப்பி வீட்டுக்கு வந்த்துட்டேன்.

மறுநாள் உங்களுக்கு பயந்து நான் பள்ளிக்கூடம் வரல ..பசங்க கிட்ட விசாரிச்சதுல நீங்களும் பள்ளிகூடம் வரலைன்னு சொன்னாங்க,,,,
சனி ஞாயிறு விடுமுறை கழிந்து லேசான தைரியத்தோடு பள்ளிக்கு வந்தேன்..முதல் வகுப்பு முடிஞ்ச பத்து நிமிஷத்துல ஒருத்தன் என் பெயரை சொல்லி கிளாஸ்க்கு வந்து செபாஸ்டியன் சார் கூப்பிட்டார்னு சொல்லிட்டு போயிட்டான்,

நான் உசுர கையில புடிச்சுகிட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தேன்.எவன் எவன் அன்னைக்கு தியேட்டருக்கு வந்த்தீங்க எல்லா பயலும் இப்போ வரனும் ன்னு சொன்னீங்க. ஒன்பது பேரும் உங்க முன்னால இருந்தோம்..
ஒன்பது பேரும் ரெண்டு வரிசயில நின்னு இருந்தோம்...எனக்கு பின்னல ராம் குமார் மறைஞ்சு நின்னான்...எல்லோரும் அமைதியா இருக்க ,ராம்குமார் கம்மெண்ட் அடிக்க என்னால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்...இதை பார்த்த உங்களுக்குகு இன்னும் பல்ஸ் எகிற பளாரென உங்களின் அஞ்சு விரல்களில் மூன்றின் ரேகை என் கன்னத்தில் இருந்தது...
முடிவாக இனிமேல் இந்த மாதிரி பன்ன மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்..

சாப்பிட்டு முடிஞ்சு எல்லாரும் திரும்ப வரனும்னு சொல்லியிருந்ததால இன்னும் பிரச்சன முடியல என பயந்துகிட்டே திரும்ப மதியானம் வந்தோம்...
மதியம் நீங்க வேற மாதிரி இருந்தீங்க,,என் தோளில் கை போட்டீங்க. ”வாங்க டா” என யானைக்கல் பக்கம்,ஒரு ஜூஸ் கடைக்கு எல்லாரயும் கூட்டி போயி மிக்சர் ஜூஸ் வாங்கி குடுத்தீங்க,,,நானும் செந்திலும் ம் சர்பத் வாங்கி கொண்டோம்..

தம்பிகளா நான் உங்கள வேனும்னு அடிக்கல,நீங்க திய்யேட்டர் ல என்ன பத்தி சொன்னதுக்கு கூட அடிக்கனும்னு தோனல..

அப்பறம் எதுக்கு சார் அடிச்சீங்க நீங்களும் தானே படத்துக்கு வந்தீங்க? என செந்தில் கேட்க

டே உங்க வயசுல நானும் எவ்வளவோ சேட்டை பன்னிருக்கேன்...இந்த படம் பார்த்தது எல்லாம் பிரச்சனை இல்ல...நானும் மனுஷன் தான் நீங்களும் மனுஷன் தான் .ஆனா அப்பரேட்டரை திட்டுனது தான் என்னால எத்துக்க முடியல.. நீங்க மதுரையில எந்த எந்தத் தியேட்டர்லலாம் படம் பார்த்துருக்கீங்கன்ன கேட்டீங்க. எல்லா தியேட்டர்லயும் பார்த்துருக்கோம்ன்னு அசோக் சொன்னான். நியூ சினிமாவுல படம் பார்த்துருக்கீங்களா?ன்னு கேட்டீங்க, இல்ல சார் அந்த தியேட்டர் ல இப்ப படம் ஓட்டுறது இல்லைன்னான் செந்தில்.

”என் வீடு முனிச்சாலையில தான் ...அப்பா சகாயம் ..ஆப்பரேட்டர் சகாயம் புள்ளைனு தான் என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க...நியூ சினிமாவுல தான் வேல...எனக்கு விவரம் தெரியாத வயசுல பிலிம் ரோல் தான் எனக்கு விளயாட்டுப் பொருள்...நான் எவ்வளவோ தடவ என் அப்பாக் கூட போக முயற்சி பன்னுனேன். ஆனா அவர் கூட்டிப் போகவே மாட்டார்..ரொம்ப அடம் பிடிச்சதால ஒரு நாள் கூட்டிட்டு போனார்..மதுரை வீரன் ஓடிக்கிட்டு இருந்துச்சு திடீர்னு கரண்ட் போயிருச்சு அவன் அவன் திட்ட் ஆரம்பிச்சாங்க, ஆப்ரேட்டர் அவனே இவனேனு...எனக்கு கோபம் கோபமா வந்துச்சு...என்னால எதுவுமே பன்ன முடியல...என் அப்பா கிட்ட்ட கேட்டதுக்கு இது எல்லாம் அப்படித்தான் சல்லி பயலுக வர்ற இடம் இதுக்கு தான் உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன்..இங்க நடக்குறத பத்தி வீட்டுல அக்கா கிட்டலாம் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட போது எனக்கு வயசு பத்து இருக்கும்....

என் அம்மா கல்யானம் ஆகுறதுக்கு முன்னால திய்ட்டருக்கு போனது. என் அக்கா ரெண்டு பெரும் அவங்களுக்கு கல்யானம் ஆகற வரைக்கும் தியேட்டருக்கு போனதே இல்ல..

நீங்க எல்லாம் முன் சீட்டுல இருந்து கடைசி சீட் வரை படம் பார்த்துருப்பீங்க...ஆனா நான் ஆப்பரேட்டர் ரூம் ல இருந்து பார்த்தவன்...ஒரு சிவாஜி படம் நல்ல கூட்டம் . திடீர்னு கரண்ட் போயிருச்சு ..கூட்டத்துல ஒருத்தன் ஆப்பரேட்டர் கேபினுக்குள்ள தண்ணி குடிக்கிற டம்ளர் விட்டு எரிஞ்சான்..அது வெட்டுனதுலதான் இந்த தலும்பு...

சினிமாவும் சினிமா தியேட்டருக்கும் பொழுதுபோக்க தான் போறோம்.அங்க யார் மனசும் நோகுறா மாதிரி நடந்துக்காதீங்க”னு சொல்லிட்டு போயிட்டீங்க....
அன்னைக்கு ஜூஸ் கடையில உங்கள பாத்தது தான் கடைசி..அதன் பிறகு அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு நாங்க பள்ளிக்கு வந்த போதும் உங்கள பார்க்க முடியலை.பசங்க எல்லாம் நீங்க அரசாங்க வேல கிடைச்சு போயிட்டத நினைச்சு நிம்மதியோட சந்தோசமா இருந்தாங்க..ஆனா எங்க ஒன்பது பேருக்கு மட்டும் அது பெரிய இழப்பாக இருந்தது...

எங்க ஒன்பது பேரில் இப்போ நான் செந்தில் சரவணன் என மூன்று பேர் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம்...ஒருமுறை திருச்சி பஸ்ஸ்டாண்டில் கணேசனை பார்த்தேன். புதுகோட்டையில் செல்போன் கடை வைத்திருப்பதாக் சொன்னான்...சரவணன் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான்...உங்களை போல கதாப்பாத்திரம் கண்டிப்பா அவன் படத்துல இருக்கும்னு உங்கள பத்தி பேசும்போது சொல்லுவான்... செந்தில் ஒரு கல்லூரியில ஆசிரியராக வெலை பார்க்கிறான்..என்னதான் தொண்ட தண்ணி கிழிய கத்துனாலும் நம்ம கெமிஸ்ட்ரி மாதிரி நடத்த முடியலைனு சொல்லுவான்..

நான் இப்போ சினிமா புரெஜெக்டர் பழுது மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தில் பொறியாளனாக இருக்கிறேன்...வேலை விஷயமாக ஏதாவது தியேட்டருக்கு போனா ஆப்பரேட்டர் ரூம் வழியாக திரையை பார்க்கும்போதெல்லாம் உங்க முகம் தான் எனக்கு வரும்..எங்கப்பா ஏன் அவரு வேலைபாக்கற இடத்துக்கு என்ன கூட்டிட்டுப் போகவே இல்லைன்னு நீங்க பேசினதுக்கப்பறம்தான் புரிஞ்சுது சார்.

அன்னைக்கு ஒரு பெயருக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தோம்...நிஜமா உங்க கிட்ட நேருல பேசனும்னு நினைச்சப்போ நீங்க வேலயில இல்ல...
இப்போ கேட்குறேன் சார்.
“என்ன மன்னிச்சுருங்க சார்”

இப்படிக்கு
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்
12 03 2006

- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
http://kaattchi.blogspot.com/2010/07/4.html

Saturday, June 19, 2010

மதுரைக்கு போகாதடி...........

”என்ன நண்பா எப்ப போன் அடிச்சாலும் எடுக்க மாட்ற என்னடா ஆச்சு”..இல்ல டா ஷூட்டிங் ல இருந்தேன் னு நன்பன் சொன்னான் என்னடா சினிமா கினிமா னு சொல்ர நடிக்க ஆரம்பிச்சுட்டயா? னு கேட்டேன் ..அட நீ வேற நம்ம ஊருல சினிமா ஷூட்டிங் நடக்குனுது டா அதான் போயிட்டேன்,,ரெண்டு நாலைக்கு முன்னால கேட்டப்பவும் இத் தானடா சொன்ன...பார்த்த படத்தையே பாக்க எரிச்சலா இல்லயா ? அது வேற படம் டா இது வேற படம்...நாளைக்கு கூட தெப்பக்குளத்துல ஒரு படம்னு கார்த்தி சொன்னான்...
இதுதான் மதுரைல இருக்குற நண்பனுக்கு போன் போட்டதில் கிடைத்த பதில்... ஆம் மதுரையும் அதனை சுற்றியும் இப்பொது பத்துக்கு மேற்பட்ட தமிழ் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது....
.
மதுரையை நோக்கி படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு..
முதலில் செட் போட்டு படம் பிடித்து பின்னர் வெளிப்புறப்படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் பொள்ளாச்சியே கதியென கிடந்த தமிழ் சினிமா மதுரைக்கு எடுத்து வந்தது மகிழ்ச்சி ,வந்த்தற்கு நன்றி .... தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மதுரைக்கும் பெரும் பங்கு இருப்பதை நீங்க மரக்க மாட்டீர்கள்///வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனதும் மதுரைல எப்படி போகுதுன்னு தான் உங்கலோட எதிர்பார்ப்பு இருக்க ஆரம்பித்தது...உங்களின் இலக்கான பி மற்றும் சி செண்டர் ரசிகன் அதிகம் இருப்பதும் இங்கு தான்..
மற்ற ஊர்களை போல இங்கே பொழுதை கழிக்க பார்க்கோ பீச்சோ இல்லை..பார்த்து பழகி போன மீனாட்சி அம்மன் கோவிலும் நாயக்கர் மகாலும் தான் எங்களை சினிமா தியேட்டரை நோக்கி நடக்க வைத்தவை...பெரிய நடிகர்களின் படஙள் கூட சென்ன்னை போன்ற நகரங்களில் பகல் காட்ட்சி இரவு காட்சி என திரையிடப்பட்ட போது இங்கே சாதாரனமாக தினசரி நான்கு காட்சிகளை திரையிடுவதும் இங்கே தான்.. பெரியாஸ்பத்திரி வளாகத்தில் ஜிகினா ல எழுதி வைக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் கட் அவுட்களையே வெறிக்க பார்த்தவர்களும் இங்கே தான்,,,
சினிமா தியேட்டர்களை பொறுத்தவரை இங்கே இருக்க தங்கம் தியேட்டர் தான் ஆசியாவிலேயே பெரிய ரெண்டாவது தியேட்டர்னு உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்கள் ஆகி போன நிலையில் இங்கே மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மீண்டும் புது பொலிவு பெற தொடங்கின ,,, சுந்தரம் தியேட்டர் கனேஷ் தியேட்டர் தேவி கலைவானி ஜெயா தமிழ் இளையரானி மகாரானி என பத்தை தாண்டும்..இதற்கு உங்களின் கைம்மாறு மதுரையையும் மதுரைக்காரனையும் ஒரு கூலிப்படை அளவுக்கு சித்தரிக்க தொடங்கி விட்டிர்கள்..
மதுரை போன்ற பகுதிகளில் படப்பிடிப்புக்கு தொந்தரவு இருக்கும் என நினைத்தே இங்கு வர மறுத்த நீங்கள் இங்கே படை எடுக்க தொடங்கியதும் கிட்டத்தட்ட வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்தது போல தான்,,,,.
கும்பக்கரை தங்கையா படத்துல ஒரு பாட்டுல ஒரமா வந்துட்டு போன சோலயம்மா கிழவிக்காக அந்த படத்த பார்த்தவனுங்க எங்க ஊருக்கரன்க...ஆரம்பத்தில் மதுரையை பற்றி திரையில் நீங்கள் சொல்லும் சின்ன சின்ன வசனக்களுக்கு கை தட்டியும் ,ஏரியல் வியூவில் காட்டப்படும் கோரிப்பாளயத்து ரவுண்டானாவும் வைகை பாலமும் நான்கு கோபுரத்துக்கும் விசில் அடிக்க தொடங்கினோம்...தேசிய விருது பெற்ற ஹௌஸ்ஃபுல் படமும் இங்கே படம் பிடிச்சது தான்...ரெட் படத்த மதுரை போல செட் போட்டு எடுத்தீங்க அதுக்கே அந்த படம் மதுரைல மட்டும் அண்ணாமலை தியேட்டர்ல 90 நாள் ஓடியது... அதன் பிறகு அவ்வப்போது மதுரைக்குள்ள வர ஆரம்பிச்சீங்க தமிழ்,குத்து.தூள் என மதுரையை கதை களமாக கொண்டு எடுத்தீங்க
இப்படி கண்மாயில வர்ற அயிரை மீன் மாதிரி சீசனுக்கு வர ஆரம்பிச்ச நீங்க ..ஆனா இப்போ தலைப்பிரட்டை கிடச்சா கூட அள்ளிட்டு போயிரலாம்னு கிளம்பிட்டீங்க
அதன் பிறகு தான் கில்லி படத்துல திரும்பவும் வந்தீங்க...அப்போ எடுத்த அருவா தான் இன்னும் நீங்க கீழ வைக்கவே இல்ல...கில்லி படம் வ்ந்த போதே மதுரை வீதிகளில் அதற்கான கண்டன போஸ்டர்கள் அடிக்கப்பட்டது கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்....முத்தக்காட்சியை நம்பிய நீங்கள் மதுரையின் அருவாள் மூலமான ரத்தக்காட்சியையும் நம்ப ஆரம்பிச்சீங்க... விருமாண்டி, காதல், என தொடர்ந்தது..கூடவே டி ராஜேந்தர் தன் படங்களுக்கு ஒன்பது எழுத்த்துல பெயர் வைக்கிறமாதிரி மதுரைல படம் டுத்தா அது ஹிட் அப்படி என்கிற உங்கள் சினிமா செண்டிமெண்டும்.. அமெரிக்காவுல படம் எடுக்குற திரு கவுதம் மெனன் கூட வேட்டயாடி விளையாட ,ஏ செண்டருக்கு படம் எடுக்குற வெங்கட் பிரபு கோவாவுக்காக மதுரை வந்தனர்...
காதல் ,விருமாண்டி ,திமிரு.காளை.,மதுரை வீரன்.கூடல் நகர்,வெயில்,சிவப்பதிகாரம்,தாஸ் கருப்பசாமி குத்தகை தாரர் என்றாகி போனது....இந்த சமயத்தில் தமிழ் சினிமாவும் அழகி ஆட்டோகிராப் என யதார்த்த சினிமா பக்கம் திரும்பியது.பருத்தி வீரன் வெளியானதும் சுப்ரமனியபுரம்...இந்த ரெண்டு படத்தையும் ஏத்துகிட்டது தான் தான் தமிழ் ரசிகன் பன்னுன தப்பு..ஆட்டோவுல தூக்கி போட்டு கழுத்த அறுத்ததற்கு கை தட்டினோம் என்பதற்காக தானே அடுத்தடுத்து., நாலு நாள் வளர்ந்த தாடியுடன் ஏத்திக்கட்டிய கைலியுடன் நாளு அருவாளோடு உங்கள் படங்களுக்கு விளம்பரப்பதாகைகள் வைக்க ஆரம்பிச்சீங்க...விளைவு
செட் போட்டு எடுக்க வேண்டிய டி.வி சீரியல் கூட மதுரையில் படம் பிடிக்கப்பட்டன ..அதன் டி ஆர் பி ரேட்டும் எகிறத்தொடங்கியது.....ஆம் விஜய் டிவியின் மதுரை யும் தெக்கத்தி பொண்ணு ம் அதற்கு சான்று
மதுரை சம்பவம் ரேனிகுண்டா ஜெயங்கொண்டான் வைகை மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி, மாட்டுத்தாவனி மாத்தியோசி கோரிப்பாளையம் என சித்திரை திருவிழாவுல அழகர் கோவில் உண்டியல் களும் தேர் பவனி வரும் வீதிகளில் எல்லாம் உங்கள் கேரவன்களும் சினிமா சாதனங்களும் வளைய வந்தன,,, மதுரை நகர பகுதிகளையும் தலைப்பாக மாற்றின பெருமை(?) ....விட்டால் குட்ஷெட் தெரு(மன்னிக்கனும் இந்த பேரு வச்சா உங்களுக்கு வரி விலக்கு கிடக்காது அதனால வைக்க மாட்டீங்க)தானப்ப முதலி தெரு .வக்கீல் புது தெரு நு பேரு மண்மலை மேடு நு பேரு வச்சுருவீங்க போல..........

தூங்கா நகரம் ,மயிலு.சிக்கு புக்கு,
ஆடுகளம்,மாட்டுத்தாவனி ,
அயிரம் விளக்கு, மிளகா,பூக்கடை ரவி
இன்னும் பெயர் சூட்டாமல் மதுரை சுற்றி படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு தான் இருக்கின்றன,,,,
கிட்டத்தட்ட மதுரை ய ஒரு கொலையாளிகளின் கூடரமாகவே மாத்திட்ட்டிங்க...கேட்டா மதுரை மண்ணு இப்படித்தான்னு மதுரைக்காரனுக்கே பாடம் சொல்ல்றீங்க .வீரம் வெளஞ்ச மன்னு.பாசமானவங்கெ ஆனா மோசமானவங்கெ...நீங்க சொல்றதெல்லாம் என்னவோ உன்மை தான் ஆனால் வீரம் நு நீங்க எதை சொல்றீங்கனு தான் புரியல....வாடி வாசல் ல காளையா அவுத்து விட்டா அது திமில உசிப்பி நின்னு விளயாடும் போது அடக்குவோம் அது தான் வீரம். நீங்க வீரம் நு சொல்ற து எப்படி என்றால் மாட்டுக்கே தெரியாமல் மாட்டோட கழுத்த அறுக்குறது தான்,அதுப்போல தான் மதுரைக்காரனின் வீரம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு ஊரெல்லாம் பரப்ப ஆரம்பிச்சீங்க....அருவாளை காட்டி யதார்த்தம் நு சொல்றீங்க...ஆனால் நீங்க இங்க மையமா வச்சு எடுத்த எந்த படமும் ஒன்றுக்கு ஓன்று தொடர்பு இல்லாமல் எடுத்து எங்களை கட்டி போட்டிங்க,,ஆனால் பள்ளிகூடத்துல காய்ச்சல் வந்தாலும் தலி வலி வந்தாலும் முதல் உதவி பெட்டியில இருந்து எடுத்து குடுக்குற கால்பால் மாத்திரை மாதிரி எல்லா கதைக்கும் அருவாளை பிரதானம பயன் படுத்தா ஆரம்பிச்சீங்க,,,,மதுரைய இப்படி காட்டுனா தான் பார்க்குறாங்க நு சொல்றீங்க,,,,ஏன் வெண்ணிலா கபடி குழு நு படம் மதுரைய களமா வச்சுத்தான் அந்த படமும் 100 நாள் படம் தானே.....


இந்தாரு,,,, அவிங்கெ.. இப்படி படத்துக்காக குரல் மொழியும் உடல் மொழியும் மாத்தனும் நு ஜெயங்கொண்டான் படத்துல பாவனா மதுரை தமிழ் பேசவச்சு சர்க்கஸ் காட்டுநீங்க
,,,
சமீபத்துல வெளியான படத்தை பார்த்துட்டு ரெண்டு பேரு பேசுனது தான்...” ஏண்டா ஊருக்கே அருவா அடிக்கிறோம் நம்ம திருப்புவனத்துல கூட இவ்ளோ அருவா இல்லட நு ...”
அருவா தூக்குவதற்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்காகவே அருவாளும் வேல்கம்பும் படைக்கப்பட்டது போல கொண்டாடுனீங்க,,,,,மதுரைல வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியலயா? இல்ல மத்தவனுக்களுக்கு அருவா புடிக்க தெரியாதா?
முன்பெல்லாம் வெளியூர்ல வேல பார்க்குறா மதுரைக்காரனுக்கு தனி மரியாதை இருந்துச்சு,,,இப்போ மதுரைக்காரன பார்த்து தான் இருக்கனும் நு பேசுறாம்க்கெ...ஜல்லிக்கட்டு நடக்குறதும் இங்க தான் மல்லிகை பூவுக்கும் மதுரை தான்,,,
யாரோ சொன்ன முகவரியில மதுரைக்கு வந்தீங்க..ஆனா அவங்க போன பாதைல போறீங்களே....மதுரைக்கு படம் எடுக்க வராதீங்கனு சொல்லல...வன்முறை ய படமா எடுக்குறது உங்க தொழில்,அத செய்யாதிங்னு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமை இல்லை
ஆனால் மதுரை அப்படி கிடயாது அதனால் மதுரைய அப்படி சித்தரிக்காதீங்கனு சொல்றதுக்கு தகுதி இருக்கு,,
உங்கள் பாஷை ல சொல்லனும்னா ,நானும் மதுரைக்காரன் தான்....

Monday, June 7, 2010

திரை கடல் ஓடி ..

“தல வாழைய நாய் நக்குன கணக்கா தான் தம்பி இருக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை. தல வாழை இலைய யாரும் நறுக்க மாட்டாங்க. அப்படி நருக்குனா தானே அது நாயிக்கு போயி சேரும். அதனால அது நடக்காத ஒரு விஷயம் தான்.அது மாதிரி தான் வெளிநாட்டுக்கு போனா வேகமா சம்பாதிச்சுரலாங்கறதும்,ஆனா அப்படியெல்லாம் கிடையாது தம்பி. அறுபதாயிரம் பணத்த கட்டி இங்க வந்து 4 வருஷம் ஆச்சு, கம்பி கட்டுற வேலைக்கு வந்தேன் இப்போ குப்பை பொறுக்கி கிட்டு இருக்கேன், ஊருல இந்தவேலைனு சொல்லமுடியுமா? என சொல்லும் தர்மராஜ் அண்ணனை போலத்தான் அரபு நாடுகளில் வேலை பார்ப்பவர்களின் நிலையும்....

விசா டிக்கெட் எல்லாம் கம்பெனி குடுத்துரும்னு சொல்லவும் என்னய நான் ஒருத்தன் கிட்ட வித்துருக்கேன்னு தெரியாமலே யாருமே தெரியாத மஸ்கட்டுக்கு புறப்பட தயாரானேன். கிளம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அங்க என் கூட படிச்ச கூட்டாளி ஒருத்தன் இருக்கான் அப்டின்னு கேள்விப்பட்டு அவனுக்கு தகவல் சொன்னேன். சரிடா நீ வந்து என் கூட ரெண்டு நாள் இருந்துட்டு உன் கம்பெனிக்கு போய்ட்டுவானு சொல்லிட்டான்.
13 வயசுல தனியா பஸ்ல பயணம் போக ஆரம்பிச்சேன். மேலூர்ல என் பாட்டி என்னைய 75 ல ஏத்திவிட்டா கோரிபாளையத்துல இறங்கி 44ம் நம்பர் பஸ் புடிச்சு வீடு வருவேன். 7வது படிக்கும்போது அய்யர்பங்களால இருக்குற இளையராணி மகாராணி (இப்போதைய ஜெய தமிழ்) தியேட்டருக்கு கோகுலத்தில் சீதை பார்த்துட்டு வீட்டுல அடிவாங்குன போது தொடங்கியது தனிமையில் சைக்கிள் பயணம். 20 வயசுல முதன் முதல்ல பாத்த ரயில் பயணம். ஆனால் 22 வயசுலயே விமானத்துல போக போறோம்னு நினைச்சு கூட பார்த்ததில்லை. ரயில்ல தான் 20 வயசுல போனோம் ஆனால் இங்க சீக்கிறமே போறோம்னு நினைச்சா, என் பக்கத்துல ஃப்லைட்டுல 3 வயசு குழந்த ஈ ன்னு இளிச்சுச்சு,,,

மதுரைக்கும் திருச்சிக்குமான 3 மனி நேர பேருந்து பயணத்தை போலவே சென்னைக்கும் மஸ்கட்டுக்குமான 3500 கி மீ விமான பயணமும், விமானத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தன. அழகர் கோவிலுக்கு யாராவது வெள்ளைகாரர்கள் வந்தா டௌசரு இல்லாம விளையாடிக்கிட்டு இருக்குற என் வயசுல உள்ள எங்க ஊருக்கார பயலுகள போட்டோ புடிச்சுட்டு போவாங்க. அதனால யாரு வந்தாலும் பின்னாடியே ஓடி போறதும் அவங்க குடுக்குற பேனாவுக்கும் பென்சிலுக்கும் ன்னு அடிமையாகி திருஞ்சேன். ஊருக்குள்ள யாராவது புதுசா டி வி எஸ் 50 வாங்கிட்டா கூட ”அவனுக்கு என்ன, எல்லாம் வெளிநாட்டு பணம்”, ”சிங்கப்பூருல இருந்து கோடாலி சாப் தைலமும் கொஞ்சோண்டு செண்டு டப்பாவும் உன் மகன குடுத்துவுட சொல்லுப்பா.” இது போன்ற வார்த்தைகளை நான் எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே ஊருக்குள்ள சொல்லி கேட்டுருக்கேன். நான் காலேஜ்ல படிக்கும்போது கூட என் கூட்டாளிகளோட வீட்டுல எல்லாம் சொல்லுவாக உனக்கென்னப்பா துலுக்க வீட்டு ஆளுக வெளிநாட்டுல சம்பாதிச்சுருவீக அப்படினு.இப்படி எல்லாரும் சொல்லி சொல்லியே எனக்கு வெளிநாட்டு மீதான வெறுப்பு அதிகமானது.

என்ன மாப்புள ஷார்ஜா வா அபுதாபி யா வடிவேல் கணக்கா வழியனுப்பியவர்களும், டே ஏர் ஹோஸ்டர் எல்லாம் டௌசர் சட்டயோட தான் இருப்பாளுகடானு இன்னும் சில நண்பர்களும், மறக்காம ஃபாரீன் சரக்குலாம் குடுத்துவிடுங்கடானு ஒரு கூட்டமும்.வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி கல்யாணம் பன்னிட்டு வந்துராத டானு என்னைய வழியனுப்பிய சகாக்களின் பேச்சுக்களும் என்னை விமானம் ஏற்றியது. .

என்ன தைரியத்துல கிளம்புனேனு எனக்கே தெரியாது. தமிழ தவிற எதுவும் தெரியாது. இதற்கு முன்னால வேல பார்த்த போது கூட உயர் அதிகாரிகளுக்கு மெயில் பன்னனும்னா தோழி ஒருத்தி கிட்ட விஷயத்த சொன்னா அமெரிக்க இங்கிலீஷ் அச்சு பிழையில்லாம அனுப்பும். மெயில காபி பேஸ்ட் செஞ்சு தான் ஓட்டுனேன். அதனால் ஆங்கிலத்துல அறைகுறை...

8 வது படிக்கிறப்ப சேதுபதி ஸ்கூல்ல கட்டுரை போட்டியில என் கூட சேர்ந்து ஓ.சி.பி.எம் பள்ளி கூடத்துல ஒரு பொண்ணு எழுதுச்சு. அதற்கு கொஞ்சம் இந்தி தெரியும் என்பது அவள் பாடுன சில இந்தி பாட்ட வச்சு கண்டு புடிச்சேன். சும்மா இல்லாம அக்கா எனக்கு இந்தில ஒண்ணு ரெண்டு சொல்லி குடுனு கேட்டதுக்கு அவ சொல்லி குடுத்தா. அப்புறம் அக்கா ”சோலிக்கே பீச்சே கியா ஹை” நா என்ன அர்த்தம்னு கேட்டேன் அவ முறைச்சுட்டு போயிட்டா. அவ சொல்லி குடுத்த 5 வரைக்கும் இப்பவும் நினைப்புல இருக்கு. அது மட்டும் தான் இந்தில தெரிஞ்சது.

இரவு 11.30க்கு ஓமன் நாட்டுக்கு வந்ததும் என் நண்பனின் அறைக்கு கார்ல கூட்டிட்டு போனான். மாப்ள கார்லாம் வாங்கிட்ட என்னா வசதியானு கேட்டேன்..” இதாண்டா பட்டிக்காட்டான் முட்டாயி கடயை வேடிக்கை பார்த்த மாதிரி பார்க்க கூடாது...இங்க நம்ம ஊரு மாதிரி பஸ்லாம் கிடயாது... எல்லாமே கார் தான்..... வாடகை கார் தான்...கொஞ்ச நாள் கழிச்சு நீயும் ஒரு டாக்சி காரன்ட்ட காசு குடுத்து போட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புச்சா உன்க்கு பொண்ணு குடுக்க கியூல நிப்பாங்கனு சொல்லிட்டான். 400 கி மீ தூரத்தை 1.30 மணி நேரத்துல டாக்ஸில வந்து இறங்குனேன். இங்க எல்லாம் அப்படித்தான். காரை கரப்பான்பூச்சி மாதிரி பயவுள்ளக ஓட்டும்.

அவனது அறையில் நாலு மலையாளிகள் உட்பட 5 பேருடன் அவன் இருந்தான். எல்லாரையும் அறிமுகப்படுத்தினான். நானும் அந்த மலையாளிகளுடன் சம்சாரிக்க தொடங்கினேன். எங்கள் உரையாடல் தமிழிலேயே தொடர்ந்தது. நானும் ஆச்சர்யமாக பார்க்க தொடங்கி இருந்தேன். என் நண்பன் சொன்னான்...இங்க எவனுக்கும் தமிழ் தெரியாதுனு நினைச்சு ஏதும் திட்டிறாத இந்த ஊருல முக்கா வாசி பயலுகளுக்கு தமிழ் தெரியும் நம்ம மாதிரி ஆளுகளுக்கு தான் தமிழ் தவிர வேற ஏதும் வரமாட்டிங்குது.

அவ்வப்போது எனக்கும் மலையாளிகளுக்கும் சண்டை ஏற்பட தொடங்கியது. ஆன் என்னிடம் எந்த ஹீரோயின் புடிக்கும்னு கேட்டான் நான் சொன்ன 3 பொண்ணுங்களுமே மலையாள தேசத்து மங்கைகள். உடனே என் நண்பனை கூப்பிட்டு,கேட்டுக்கோடா எங்க ஊரு பொண்ணுங்க தான் அழகுனு சொல்ல, டக்குனு நான் சொன்னேன் எங்க ஊரு பொண்ணுங்களுக்கு அவுத்து போட்டு ஆடதெரியாதேனு, அத நல்லாவே பன்னுதுங்க மலையாள குட்டிகள்னு சொல்லவும் அவன் இப்போ எங்க ஊருல ரிலீஸ் ஆகி இருக்குற ஹேப்பி ஹஸ்பண்ட் படம் வரைக்கும் 3, 4 ஹீரோ நடிச்சதுனு சொல்லவும், எனக்கும் அவனுக்கும் அவ்வப்போது தொடங்கிய சண்டை மேலும் தொடர்ந்தது.

ரெண்டு நாள் முடிஞ்சதும் என் நண்பண் கிட்ட என்னென்ன மொழி பேசுவாங்கனு கேட்டேன். இந்தி, மலையாளம்,அரபி இதுல கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சா போதும்னு சொன்னான். எவனாவது நம்மள திட்டுறானானு தெரியாம போயிற கூடாதேனு நான் எல்லா மொழியிலும் கெட்ட வார்த்தைகளை முதலில் சொல்லிகுடுடானு கேட்க நாலு கெட்ட வார்த்தைகளையும், நன்றி மற்றும் மன்னிப்புக்கான அந்தந்த வார்த்தைகளை கற்றுக்கொடுத்தான். இப்படித்தான் எல்லாருடைய பயணமும் இருந்திருக்க கூடும்.

நான் தங்கி இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் இருப்பவர் தான் மேலே சொன்ன தர்மராஜ் அண்ணன். இங்கே வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை எனக்கு கிடைக்காததால் பதினைந்து நாட்கள் எனது அறையிலேயே முடங்கி கிடந்தேன். அப்போது அறிமுகமானவர் தான் மேலே சொன்ன தர்மராஜ். என் பக்கத்து அறைவாசி. அவர் தமிழ் என்பதும் எனக்கு தெரியாது.என்னுடய மொபைலில் நான் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் பாட்டு தான் அவர் பார்வை என் மேல் விழுந்திருக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். என்ன தம்பி எந்த ஊரு?.மதுரை என்றேன். அட நமக்கு மணப்பாறை தான்...னு சொல்லி அறிமுகமானார். எப்படி தம்பி சாப்பாடு எல்லாம், கடையில சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க சமைச்சு சாப்புடுங்க.

சமைக்க தெரியாதே.இதென்ன கம்ப சூத்திரமா வாய்க்கு ருசியா இல்லாட்டியும் வயித்துக்கு குறை இல்லாம இருக்கும் தம்பி. நான் சொல்லி தரேன்னு எனக்கு சமயல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார், நான் தமிழன் என்கிற ஒரே காரணத்தால்…

தினமும் ஈச்ச மரங்களும் சிட்டு குருவிகளும் என்னை கிண்டல் செய்வது போலவே தோணும்.. யாருமே தெரியாத இடத்தில் இப்போது தர்மராஜ் மட்டுமே என் ஆறுதல். எனக்கு வீட்டு நினைப்பாவே இருக்குது நான் ஊருக்கு போறேன் என்றேன் ஒருவாரத்தில்.

தம்பி அப்படியெல்லாம் முடிவு பன்னாதீங்க,எங்கள பாருங்க இங்க எட்டு பேரு இருக்கோம். எல்லாம் தமிழ் ஆளுக தான், என்ன ஊருல இருந்தா வெளிநாட்டுக்காரங்கனு எகத்தாளமா பேசுவாங்க. இங்க கவர்மெண்டுல காண்டிராக்டில குப்பை அள்ளிக்கிட்டு இருக்கோம். இந்தா சாயங்காலம் 7 மனிக்கு இறக்கி விட்டு போய்டுறாங்க. இதுக்கப்பறம் மணிக்கனக்குல குளிக்க காத்துகிட்டு நிக்கனும். அப்பறம் சமைச்சு சாப்பிட்டு தூங்க 11 மணி ஆயிரும். திரும்ப 4 மணிக்கு எந்திருச்சு சமைக்கனும். 5 மணிக்கு கக்கூசுல உட்க்கார்ந்தா என்ன தம்பி வரும்...?. இதெல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருந்துச்சு. அப்புறம் போக போக பழகிருச்சு. இப்படி அவரது புலம்பல்களே ஒரு கட்டத்தில் ஆறுதலாகி போனது தான் கொடுமை.

ஆமாம் அவரை போலத்தான் இன்னைக்கு அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியனின் நிலைமையும் கூட. இப்படி 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை பார்க்கும் அவரது மாத சம்பளம் 100 ரியால்கள். ஓமனின் கணக்கு படி இந்த 100 ரியால் ஒரு ஒமான் வாசியின் இரண்டு நாள் செலவு தொகை. நம்ம ஊரு கணக்கு படி 12,000. இதில் சாப்பாடு பிடித்தம் போக 8 000 முதல் 10000 வரை கிடைக்கும். காலையில் ஒரு குளிர்பானம், சிறிது ரொட்டி துண்டுகள். இரவில் தினமும் சப்பாத்தியுடனே இவர்களது வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு நான் சந்தித்த மற்றொரு நபர் பாலமுருகன். வாலிபத்தை முடிக்க போகும் நபர். இதற்கு முன்னர் துபாயில் வேலை பார்த்தாலும் இந்த மஸ்கட்டுக்கு புதியவர். என் அறையிலிருந்து 40 மீட்டரில் உள்ள தண்ணி குழாயில் தண்ணீர் பிடிக்க போகும் போது பழக்கமானவர். பாஸ்,நண்பா அண்ணண்,தம்பி என அவர் நினைக்கும் உறவுகளுக்குள் நான் மாறிப்போவேன்.

நானும் வந்த புதுசுல ஊருக்கு போகனும்னு திரிவேன். அப்படி நம்ம ஊருக்கு போயிட்டா ஊருல சும்மா திரியிற நாயிக கூட நம்ம மேல கல்லெறிஞ்சுட்டு போகும் பாஸ். வெளிநாட்டுலேயே இதெல்லாம் பொழைக்க தெரில, இதெங்க உருப்பட போகுதுனு கிண்டல் பேசுவாங்க. இந்தா அடுத்த மாசம் தம்பிக்கு பீஸ் கட்டனும். ஊர்ல ஜவுளிக்கடையில வேலை பார்த்தேன். வெளிநாட்டுல வேலை, வேகமா சம்பாதிச்சுடலாம்னு வந்தேன். அதிகம் பணம் சம்பாதிக்கனும்னு ஆசை எல்லாம் இல்ல, அப்பா விட்டு போன கடன வேகமா அடைக்கனும்னு தான் வந்தேன், கிட்ட தட்ட முடிய போகுது. எப்படியோ என் தம்பிய படிக்க வச்சசாச்சு. இனி என் பாரம் கொஞ்சம் குறையும்னு சொல்லும் பால முருகன் ஒரு கட்டுமான பணி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
தினமும் 200 மீட்டருக்கு மேல் குழி தோண்டுவது தான் அவரது பிரதான வேலை. கை காச்சு போயிருச்சு தலைவா. ஊருல பாடி பில்டரா இருந்தேன் இப்போ சத்த முழுசா எடுத்து டி பி வந்தவனாட்டம் ஆகிப் போச்சு நெஞ்சு கூடு என சொல்லும் இவரது பார்ட் டைம் வேலை இங்க உள்ள பெப்ஸி டப்பாக்களை பொறுக்கி சேர்த்து வைத்து அதன் மூலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்துட்டு சம்பளத்தை மணிஆர்டர் செய்வது தான்.

இங்க இப்படி வேலை பாக்குறத ஊருல இருந்த 5 ஏக்கருல பார்த்துருந்தா சொத்தாவது மிஞ்சி இருக்கும் தம்பி. நிலத்த வித்துட்டு இங்க வந்தேன் என சொல்லும் சேகர் அண்ணன் பெரம்பலூர் காரர். இப்போ லீவுக்கு ஊருக்கு போனா கூட 20000 ரூபா வேணும். அக்கா புள்ள தங்கச்சி புள்ளனு எல்லாத்துக்கும் ஏதாச்சும் வாங்கிட்டு போகனும்.இல்லைனா அதுக்கும் சண்ட போட ஆரம்பிச்சுருவாங்க. வெளிநாட்டுல இருந்து கைய வீசிட்டு வந்துட்டான்னு. அடுத்த மாசம் ஊருக்கு போறேன் எதுவும் குடுத்து விடனும்னா சொல்லுங்க குடுக்குறேன் இனி மேல் வெளிநாட்ட நினைக்க கூட மாட்டேன் தம்பி.

ஒரு ஓட்டலில் எனது உடை அமைப்பை பார்த்து அறிமுகமானவர் தான் நண்பர் சுரேஷ். சார் மதுரையானு கேட்டார். ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க?.
நம்ம ஊருகாரங்க மெட்ராசுக்கு போனா மஞ்ச பை, வெளிநாட்டுக்கு போனா பூட்கட் பேண்ட் என அறிமுகமாகி ஒரு நாள் வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரோட வீட்டுக்கு போனேன், ஜெயகாந்தன் சுந்தர ராமசாமியின் என தமிழ் இலக்கிய புத்தகங்கள் இருந்தன.

வேர ஒண்ணுமில்ல நமக்கு சினிமா இயக்குநர் ஆகனும்னு கனவு பாஸ், இன்ஜினியரிங் முடிச்சுட்டு அங்க போறதுக்கு ரொம்பவே எதிர்ப்பு. வீட்டுலயும் கொஞ்சம் கடன்.இங்க வர்றதுக்கு முன்னால சான்ஸ் கேட்டு சுத்துனேன்.சான்ஸ் கிடைக்கிற நேரத்துல இங்க வர வேண்டிய சூழல். வந்துட்டேன்.வீட்டுலையும் ரெண்டு வருஷத்துக்கு பிறகு சேர்ந்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ரெண்டு வருஷம் முடிய போகுது. ஊருக்குபோக போறேன் அடுத்த மாசம் திரும்பவும் ஆரம்பிக்கனும்.

நாம என்ன ஹீரோவா சார்.இந்த வயசுக்குள்ள நடிக்கனும்னு, ஹாலிவுட்ல எல்லாம் 40 வயசுல தன சார் டைரக்ட் பன்றாங்க.ஆனால் ஒன்னு சார் தமிழ் சினிமாவுல உப்புமா கம்பனில கூட வேலை பார்த்துரலாம் இனிமேல் இந்தவெளிநாட்டநினைச்சு கூட பார்க்க கூடாதுங்க.ஆனால் இந்த மலையாளிகள் எங்க போனாலும் இருக்காங்க. இவனுங்கள எல்லாம் வேலை கிடையாதுனு அனுப்பிச்சா தங்குறதுக்கு அவனுங்க ஊருல இடம் பத்தாது சார்னு சொல்ல நானும் விடைபெற்றேன்.

தினத்தந்தி குருவியார் வாரமலர் ஆகியவற்றில் படித்த நியாபகம். கேட்க கூடாதது நடிகைகளின் சம்பளமும் நடிகர்களின் வயதுமாம். தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். கேட்கக்கூடாதது வெளிநாட்டில் இருப்பவனது வேலையும் தான்.

- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_07.html

Sunday, May 23, 2010

வெள்ளையம்மாவும் அவள் வளர்த்த புறாவும் .......


hello சரவனா நல்லா இருக்கியா டா? எங்க இருக்க?
நா நல்லா இருக்கேன் மாப்ள.இண்டர்வியூ போனயே என்னா ஆச்சு?
திங்க கிழமைல இருந்து வரச்சொல்லிட்டாங்கெடா.ஆனா திருச்சில வேல….சரிடா சாயங்காலம் எதும் வேல இருக்கா?னு கேட்டேன்.
ஏன் அப்டினு கேட்டான்…இல்ல வேலைக்கு போறோம் புது ட்ரெஸ் எடுக்காலாம்னு தான்…விளக்கு தூன் வரைக்கும் போகனும்….வர்றியா?னு கேட்டேன்…இல்லடா மாப்ள 5 மனிக்கு என் ஆளு தல்லாகுளம் கோவிலுக்கு கூப்டுருக்கா போகனும்னு சொல்லிட்டான்…இல்ல மாப்ளே 5 மனிக்குள வந்துரலாம் னு எப்படியோ போனிலேயே சமாதானபடுத்தி கடைக்கு கூப்பிட்டு போயிட்டேன்…மனி 4 அடித்ததிலிருந்த்தே அவனுக்குள் போன் வந்து கொண்டே இருந்தது..மாப்ளே "நா கிளம்புரேன் டா நீ வாங்கிட்டு பஸ்ல வந்துரு..தல்லாகுளம் வந்ததும் எனக்கு போன் பண்னு சேர்ந்து வீட்டுக்கு போயிரலாம்"னு சொன்னான்….இருடா இன்னும் கொஞ்ச நேரம் தான் சேர்ந்தே போயிரலாம் டா னு எவ்வளவோ சொன்னேன்….மாப்ளே கோவிச்சுக்காத ட…என் போன பாருடா னு குடுத்தான்…48 மிஸ்டு கால்…78 குறுந்த்தகவலும் ,போனில் மெமரி இல்லாததால் உள்ளே வர இன்னும் பல தகவல்களும் காத்திருந்த்தன…நீயே அத திறந்து பாருடா. னு சொன்னான்….இல்லடா உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் வேனாம்னு சொன்னேன்…சும்மா பாரு என்ன இருக்கபோகுதுனு சொன்னான்….ஆர் யூ தேர் னு சுமார் 10 மெஸேஜ் கள் இப்படி படித்துக்கொண்டே டெலீட் செய்த போது புதுசா ஒரு மெஸேஜ்…”இப்படியே உன் ப்ரெண்ட்ஸ் கட்டிகிட்டே அழு….லவ் பன்ற எல்லாருக்கும் அனுமார் மாதிரி ப்ரெண்ட்ஸ் இருந்தா என் லவ்க்கு மட்டும் சகுனி மாதிரி வந்துறான்கெ…நானா வந்து உன்கிட்ட உன்ன லவ் பன்றேனு சொன்னதால தானே இப்படியெல்லம் பன்ற னு, இருந்துச்சு …இதுக்கு மேல படிச்சா நல்லா இருக்காதுனு அவன அனுப்பி வச்சேன்…கூடவே சொன்னேன்…அந்த குதிரவால் காரிக்கு ரொம்ப திமிரு டானு…
.நான் என்ன சகுனியா?எதுக்கு இப்படில்லாம் அவ பேசனும் அப்படி பன்னுனது தப்புனா இதுக்கும் மேல என்னென்னமோ நடந்தும் விடுடா பார்த்துக்கலாம் னு சொன்ன வெள்ளயம்மா எவ்வளவோ தேவலை போல னு தோனுச்சு…


வெள்ளயம்மாள் நடிகை ரேவதியை போல கொழு கொழு கன்னம்..அவளும் ரேவதின் தீவிர ரசிகை தான்...அந்த சோடா பாட்டிலுக்கு உள்ள ஊசல் ஆடிக்கிட்டு இருக்குற கோலி குண்டு போல எனக்குள்ள சில கேள்விகள் வந்து வந்து போகும்...எனக்கு யாரு ராஜா னு பேரு வச்சாங்க ,வேர வச்சுருக்களாமே.இப்போதைய விளம்பரங்களில் " டீச்சர் சொல்லித்தரலயா ஷேரிங்? இது போல அவளுக்கு ஏன் எந்த டீச்சரும் சின்ன பசங்களுக்கும் மரியாதை குடுக்கனும்னு சொல்லிதரல?இல்ல நாலாவது படிகிற வயசுல நான் மரியாதையை அவ கிட்ட எதிர்பார்த்தது தப்பா?,,,இவ கூட தம்பியோ தங்கச்சியோ ஏன் பொறக்கல?இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்..
மேலூரில் என் பெரியம்மாவின் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன்..சங்கு ஊதும் ஆபிஸ் தெருவில தான் வீடு..வீட்டுக்கு பக்கத்துல கொஞ்சம் காலி இடம்..பக்கத்துல ஒரு சோடா கம்பெனி..இன்னும் கொஞ்சம் தள்ளி தள்ளி சில வீடுகள்…எங்க வீட்டுக்கு எதிரே நல்ல தண்ணி குழாய்.பக்கத்துல கல்யாண மண்டபம் இருக்கும்…பக்கத்து தெரு ஆரம்பிக்கும் இடத்தில் காலெஜ் பசங்க தங்கி படிக்கிற ஹாஸ்டல்…வீட்டுக்கு பக்கத்துல இருக்குற சோட கம்பெனி வெள்ளையம்மாள் குடும்பத்துக்கு சொந்தமானது..
இந்த வெள்ளையம்மாள் வேற யாரும் இல்ல ..என் அக்கா கூட படிச்ச பொன்னு… என் அக்காவின் நெருங்கிய தோழி..கிட்ட தட்ட எனக்கும் இன்னொரு அக்கா தான்..அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு….அதுக்கு இன்னோரு பெயர் இருக்கு கார்த்திகா, கார்த்திகா இந்த பெயர் தான் சர்டிபிகேட் ல எல்லாருக்கும் தெரியும்…ஆனால் அவுங்க பாட்டியோட பேருதான் வெள்ளையம்மாள் அந்த பெயரைதான் அதுக்கும் வச்சாங்க…வெள்ளையம்மா அப்டிங்கிற பேரு அவங்க சொந்தகாரங்களுக்கும் என் அக்கா போன்ற இன்னும் சிலருக்கு மட்டும் தான் இந்த வெள்ளயம்மா ரகசியம் தெரியும்….எனக்கு கூட தெரியாது…. .நானும் என் அக்காவும் பள்ளிக்கூடம் கிளம்பி இருப்போம்…அப்போ குண்டுக்காரர் ஜவுளிக்கடைக்கு நானும் ஒரு பிராண்ட் அம்பாஸிடர்…ஆமா எனக்கு குண்டுக்காரர் ஜவுளிக்கடை னு எழுதுன மஞ்சப்பைல என்னோட நோட்டு எடுத்து வச்சு ரெடியா இருப்பேன்…அப்போ வெள்ளயம்மாவும் என் அக்கா கூட சேர்ந்து போறதுக்கு வீட்டுக்கு வரும்..வந்தா சும்மா இருக்காது..என்ன பட்ட பேரு சொல்லி கூப்பிட்டுக்கொண்டே இருக்கும்…டேய் ஓட்ட பல்லா,, அப்டினு…எனக்கு எதிர்த்து முறையிட தெரியாமல் என் அக்கா கிட்ட சொல்லி அழுவென்…அப்போ என் அக்க சொல்லுவா..இனிமேல் அவ அப்டி சொன்னா வெள்ளயம்மானு சொல்லுனு…அதுல இருந்து நானும் அமைதியா இருப்பேன் ,பள்ளிக்கூடம் கெளம்பற நேரமா பார்த்து "போடி வெள்ளயம்மா"னு சொல்லிட்டு ஓடி போயிருவேன்…இனிமேல் நீ என்ன பட்ட பேரு வச்சு சொன்னா நானும் இப்டிதான் சொல்லுவேனு சொல்லி மிரட்டுவேன்….வெள்ளயம்மா அக்காவுக்கு கூட பொறந்தவங்கனு யாரும் இல்ல அதனால என்னய அதுக்கு ரொம்ப பிடிக்கும்…என் மேல ரொம்ப பாசமா இருக்கும்."நான் உன்ன கார்த்திகா அக்கானு சொல்லுவேன் நீயும் என்னய ராஜானு தான் சொல்லனும் அப்டினு கேப்பேன்…சேரிடா ஒட்ட பல்லா னு சொல்லும்…
எனக்கு சனிக்கிழமை லீவு விட்டா குண்டு வெளயாடுறதும் பம்பரம் வெளயாடவும் கெளம்பிருவேன்..வெள்ளயம்மா அக்கா அவுங்க சோடா கம்பெனி ல சோடா பாட்டிலுக்கு லேபிள் ஒட்டிகிட்டு இருக்கும்…குண்டு வெளயாடும்போது கண்ணாடி குண்டுகளை விட ஊதா கலர் சோடா குண்டு வச்சிருந்தா மரியாதை அதிகமா இருக்கும் .எல்லாரும் அந்த மாதிரியான குண்டுக்காக ஒவ்வொரு சோடா கம்பெனியின் பக்கத்து குப்பைமேட்டை சுத்திக்கிட்டு இருப்பானுக...எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. …
எனக்கு ஊத கலர் குண்டு எடுத்து வச்சு குடுக்கும்….அதுபோக வெள்ளிகிழமை ஒலியும் ஒளியும்,சனிக்கிழமை சிட்ரஹாருக்கு நடுவே வரும் தமிழ் பாட்டு நாயித்துகிழ்மை டெக் ல படம் சாயங்காலம் டிடி5 ல படம் னு அவுங்க வீட்டில இருப்போம்…வெள்ளயம்மா அக்காவுக்கும் பொழுது போகலைனா எங்க அக்கா கூட சேர்ந்து நொண்டி ,இல்லைனா புளியம்பழ முத்துல பல்லாங்குழியும் வெளயாடிக்கிட்டு இருப்பாங்க.. ……
இப்படித்தான் நான் .,வெள்ளயம்மா அக்கா, என் அக்கா என 5 பேரும் எங்க தின்னயில உட்கார்ந்து பரீட்ச்சைக்கு படிச்சுட்டு இருந்தோம்…நா படிச்சு படிச்சு ஒப்பிக்கிறதும் என் அக்கா 12 வதுக்கு படிக்கறதுமா இருக்கும்…நாங்க படிச்சிட்டு இருக்கும்போது நாலு பசங்க தன்னி புடிக்கிறதுக்காக எங்க வீட்டு எதுத்த பம்புல வந்து நின்னாங்க…நானும் படிச்சது போதும்னு சொல்லி ஓடி ப்போயிட்டேன்…அப்போ தான் என்னய எப்பவும் ஓட்ட பல்லா,கரச்சா மண்ட னு சொல்றா வெள்ளயம்மா அக்க என்ன மரியாதயா ராஜா எரும மாடு இப்படியே ஊரு சுத்திகிட்டு திரி னு சொல்லி கத்துனா,,,அன்னைக்கு அவ என்னய ஓட்டப்பல்லா னே சொல்லிருக்கலாம் னு இப்போ நினைச்சாலும் வலிக்குது….ஏன் அக்கா என்ன அப்டி நீ கூப்பிடல…..

அப்போதான் தண்ணி புடிக்க வந்த நாலு பசங்கள்ல ஒருத்தர் பேரு ராஜா…என்னடா நம்மள எதுக்குடா எரும மாடு னு ஒரு பொன்னு ஜாடயா திட்டுறானு நினைச்சு முறைச்சு பார்த்து இருக்கான்…அப்போ தான் ரெண்டு பேருக்கும் ஒரு அறிமுகம் கிடைச்சுருக்கு….அதுக்கு பின்னால் அந்த ராஜாவும் வெள்ளயம்மாவும் முறைக்கிறதும் என் அக்கா கிட்ட ராஜாவ பத்தி வெள்ளயம்மா நக்கல் பண்ணி சிரிக்கவும் ஆரம்பிச்சுருக்கங்க…இடையில நானும் ஒரு நாள் அவள வெள்ளயம்மானு கூப்பிடுறத கேட்டுட்டாங்க…அதுக்கு அப்புறம் எங்க வீட்டை கடந்து போறப்ப எல்லாம் அந்த நாலு பேருல ரெண்டு பேரு, பாலின் நிறம் வெள்ளை னு சொல்லி முடிக்க இன்னொருத்தன் அம்மாவுக்கு லெட்டெர் போட்டயாடானு கேட்க ஆரம்பிச்சாங்க…. அப்போ எல்லாம் டி வி ல சுன்னாம்புக்கான விளம்பரம் ரொம்பவே பிரபலம் அதை வைத்துகொண்டும் வெள்ளை வெள்ளை னு கத்திட்டு போக ஆரம்பிச்சாங்க. இந்த விஷயம் என் அக்கா தன் என் கிட்ட சொன்னா,,,,என்னோட ராஜா ன்ற பெயர அந்த ராஜாவ கூப்பிடறதுக்கும்,ஜாடயா பேசுறதுக்கும் யூஸ் பன்ன ஆரம்பிச்சுட்டா…இப்படியே சாயங்காலம் ஆனதும் இந்த விளயாட்டு தொடர்ந்து நடந்துக்கிட்டு இருந்துச்சு...ஒரு ரெண்டு நாள் வெள்ளயம்மாள் எங்க கூட இல்ல....அந்த ரெண்டாவது நாள் நான் வீட்டு முன்னால சைக்கிள் ஓட்ட பழகி கிட்டு இருந்த சமயம் ,அப்போ தான் பெரிய ராஜா என்ன கூப்பிடாரு...என்ன னு கேட்டேன்..நான் சைக்கிள் ஒட்ட சொல்லி தறேன் னு கூட்டி போனாரு,,,நான் மாட்டேனு சொல்லிட்டு வீட்டுக்குள்ள இருந்த என் அக்காவ பார்தென் அவ போகலாம்னு சொன்னா.அப்போ தான் அந்த அண்ணன் என் கிட்ட ஒரு லெட்டெர் குடுத்தார்...இத வெள்ளயம்ம கிட்ட கொடுத்துரு டா னு... நான் போயி குடுத்தென்....என்னய தான் படிக்க சொன்னா..."சத்தியமா நான் உங்கள கிண்டல் பண்ணலங்க,,,பசங்க தான் பண்ணிட்டாங்க...இனிமெல் இப்படி பண்ண மாட்டோம்...எங்களுக்கு பயந்து நீங்க வெளியில வராம இருக்க வ்ணாம்"னு இருந்துச்சு...அத படிச்சு எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்...அதுக்கு வெள்ளயம்மா அக்காவும் சரிங்க னு பதில் எழுதி குடுத்தா...என் அக்காவும் வெள்ளயம்மாவும் என்னய அவங்க லவ்வுக்கு தூது அனுப்புறதுனு முடிவு பன்னிட்டாங்க…
ஒரு நாள் என் அக்க என் கிட்ட சொன்னா , கார்த்திகா உனக்காக ஊதா குண்டு எடுத்து வச்சுருக்காளாம் வந்து வாங்கிக்க சொன்னா?னு சொன்னா…நானும் ஆசயோட போனேன்…டேய் உனக்கு நா குண்டு தர்ரேன்…நா ஒரு பேப்பர் தர்ரேன்..இங்க தன்னி புடிக்க உசரமா ஒருத்தன் வருவான் ல அந்த அன்னன் கிட்ட குடுத்துருடா..ஆனால் பத்திறமா குடுக்கனும் படிச்சு பார்க்க கூடாதுனு கண்டிஷன் போட்டு குடுத்தாள்…நானும் கொண்டு போயி குடுத்தேன்…அவள் சொன்னது போலவே..

இந்த தடவ ராஜா என்னய அவுங்க ரூமுக்கு கூட்டி போனாரு.....நான் 12 வயசுலயே சேவல் பன்னையின் வாடையை நுகர்ந்து விட்டேன்.அவ்வப்போது வாசலில் அதிகமாகியும் குறைவதுமான செருப்புகள்…ஒரமா நாலைந்து டம்புள்ஸ்,அஜய் ஜடேஜா, கபில் தேவ் அசாருதீனின் வால் பேப்பர்களும் சில இந்தி நடிகைகளின் போட்டோக்களும் எஸ் பி பி யின் போட்டோக்களும் அலமாரிகளில் சில கோப்பைகளும் இருந்தன,,,தம்பி உன் பெயர் என்னடா?ன்ன படிக்கிற? அன்னே என் பேரு ராஜா அல் அமீன் ஸ்கூல்ல 4 வ்து படிக்கிறேன்...உங்க பேரு? என் பேரும் ராஜா தான்...னு சொல்லிகிட்டே ஒரு கடைக்கு கூட்டி போனாரு என்ன வேனும் ? ஒன்னும் வேணாம் அண்ணே, எதாச்சும் சாப்புடு டா.. சேரி னே எனக்கு தேன் மிட்டாய் வாங்கி குடுங்க,,,,ஒரு ரூபாய்க்கு 20 , 5 காசு தேன் மிட்டாய் சாப்பிட்டுகிட்டே வீடு வ்ந்து வெள்ளயியம்மா அக்கா கிட்ட அவர் குடுத்த லெட்டெர குடுத்தேன்,,,இப்படி வாரத்துக்கு ரெண்டு தடவ நான் அவர் ரூம்க்கு போயிட்டு வந்து,அக்கா அந்த அன்னே சூப்பரா பாடுராருக்கா...பாட்டு புக் வச்சுருக்காரு...எனக்கு கனக்கு லாம் நல்லா த்ரியும் உனக்கு சந்தேகம் னா என்கிட்ட கேளுனுலாம் சொல்ராரு அக்கா...ரொம்ப நல்ல அன்னே ஆனா சிகரட்டு தான் குடிக்கிறாரு...எனக்கு அப்போ மட்டும் வாந்தி வர்றா மாதிரி இருக்கு னு நான் கூட சர்டிபிகேட் குடுக்க ஆரம்பிச்சேன்....ஒவ்வொரு முறையும் நான் லெட்டெர் வாங்கி கொண்டு வந்து குடுக்கும் போதெல்லாம் வெள்ளயம்மா மட்டும் படிச்சுட்டு தனியா சிரிக்கிறத பார்க்கும்போது என்ன லூசு மாதிரி ஆயிட்டானு தோனும்....
வெள்ளயம்மா வும் என் அக்காவும் டைப் ரைட்டிங் கிளாஸ் போகனும்னு வீட்டுல கேட்க ஆரம்பிச்சாங்க….என் அக்கவுக்காக வெள்ளயம்மா எங்க வீட்டுலயும் வெள்ளயம்மாவுக்காக என் அக்கா அவுங்க வீட்டுலயும் பேசி அனுமதி வாங்குனாங்க….எங்க வீட்டுல என் அக்காவுக்கு செக்யூரிட்டியா என்னய அனுப்பிச்சாங்க…அங்கதான் ஏற்கனவே ராஜா படிக்கிறார்னு…அவருக்க்காக தான் இவ அங்க சேர்ந்து படிச்சுருக்கா…கிளாஸ் முடிஞ்சு வரும்போது எங்க மூனு பேருக்கும் முன்னால ராஜாவும் அவரோட நண்பர் குமாரும் முன்னாடி நடந்து போவங்க… செக்கடிக்கிட்ட இருக்குற ரைஸ் மில் பக்கத்துல ஒரு சந்து இருக்கும்……அங்க பெரும்பாலும் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது….ஒரு முனையில யாரும் வர்றாங்களா னு நானும் இன்னோரு பக்கம் குமார் அண்ணனும் பாத்து சொல்லுவோம்…ன் அக்கா வெள்ளயம்மாவுக்கு துனைக்கு நிப்பா…இப்படியும் அவங்க நட்பு(?) தொடர்ந்துச்சு.சோடாவுக்கும் தொண்டைக்கும் நடுவே உள்ள கோலி குண்டு போல தான் அவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான்…

இப்படித்தான் பள்ளிகூடத்த கட் அடிச்சுட்டு வெளில போறதுக்கு எப்படினு என் ரெண்டு அக்காவும் திட்டம் போட்டுகிட்டு இருந்தாங்க,,,, அப்போ நான் தான் ஐடியா குடுத்தேன், அக்கா நம்ம வீட்டுல இருக்க பர்தா வ எடுத்து அந்த அக்கா கிட்ட குடுத்துரலாம்னு….அதுக்கும் நான் தான் வீட்டுல பேசனும்னு சொல்லிட்டா,,,
பெரியம்மா, " பள்ளிகூடத்து நாடகத்துல சேர்ந்து இருக்கேன்…அதுல ஒரு பிள்ளைக்கு பர்தா வெணும்" னு சொல்லி வெள்ளயம்மா அக்கா கிட்ட வாங்கி குடுத்தேன்….அண்ணைக்கு அவுங்க வெளில போயிட்டு வந்தாங்க…நான் போயி பர்தா கேட்டேன்…. அதுக்கு அவ சொன்ன பதிலுக்கு எனக்கு உசுரே போயிருச்சு…..ஆமா அவளோட ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு ராஜா கொண்டு போயிட்டாராம்…எனக்கு வீட்டுல எப்படி சொல்லி சமாளிக்கனே தெரியல…என் அக்கா ன் நிலமய பார்த்து சிரிசுகிட்டு இருந்தா… ஒரு மூனு நாள் கழிச்சு வீட்டுல சொன்னேன் , பள்ளிகூடத்துல மிஸ் பர்தா வ தொலச்சுட்டாங்க னு,,,, அவ்ளோ தான் என்ன ய சாகடிக்காத குறை தான்…இனி மேல் அதுல சேரனும் இதுல சேரணும்னு வ்ந்த வெளக்கமாறூ பிஞ்சுரும்னு திட்டிட்டாங்கெ,,,, அப்போ கூட என் அக்கா பயந்தா,எங்க நா சொல்லிகுடுத்துருவெனோ னு…
.
திரும்பவும் லெட்டெர் குடுக்க சொன்னா வெள்ளயம்மா.அப்போதான் கேட்டென் அக்கா உனக்கு அந்த அண்ணன புடிக்குமா னு....ரொம்ப புடிக்கும் டா னு சொன்னா....நீ ஷவர் பாத்ல குளிச்சுருக்கயா? னு கேட்டா நான் பார்த்தது கூட இல்லக்கா னு சொன்னேன்... அப்போ பக்கத்துல ஒரு பாலித்தீன் பயில என் அருணா கயிரு ஊக்குல அங்க அங்க ஒட்டை போட்டு தன்னிய நிரப்பி என்னய நனய வச்சா,,அக்கா உனக்கு ரொம்ப அறிவு னு சொன்னேன்...நான் கண்டு புடிக்கல டா ராஜா தான் இப்படி எனக்கு சொல்லி குடுத்தாரு,எனக்கு கூட ஒரு நாள் இப்படி பன்னுனாரு னு சொன்னா..
அக்கா எனக்கு முழு பரிச்சை ஆரம்பிச்சுரும் இனிமேல் வெளியே வந்தா எங்க பெரியம்மா திட்டும்....பரீட்சை முடிஞ்சு வரேன் கா னு சொல்லிட்டென்....இதே பதிலை தான் ராஜா அன்னன் கிட்டயும் சொன்னேன்.அப்போதான் அவர் கை பார்த்து என்ன அன்னே கையில புண்ணு னு கேட்டதுக்கு சும்மா னு சொன்னாரு....அப்போதான் குமார் அன்னென் சொன்னாரு ல்லாம் உன் அக்கா காரி பண்ணுன வேல தான்... சும்மா ஊரு சுத்த தானே பழகுறனு சொல்லிருக்கா , அதுக்கு அடுப்பில கை வச்சுட்டான் னு சொன்னாரு...ராஜா அண்ணே சிகரட்ட ஸ்டைலா தூக்கி போட்டு பிடிப்பீங்க அது மாதிரி பன்னுங்க னு சொன்னேன்….அய்யய்யோ சிகரட்டு குடிச்சா உடம்பு கெட்டு போயிரும் டா அதுனால் நானும் இப்போலாம் சிகரட் குடிக்கிறது இல்ல னு சொன்னாரு…...குமார் அண்ணே ன் கிட்ட "ஏன் ட இப்படி அடிக்கடி இங்க வரும்போது இட்டுல உங்க அக்காவ தாவது செஞ்சு குடுத்தனுப்ப சொல்லலாம் ல னு சொன்னதுக்கு. ராஜா அண்ணே எங்க டா அவளுக்கு சாப்பிடவே நா தான் சொல்லி குடுத்தேன்..அவளுக்கு முதல்ல சாப்பிட கத்து குடுக்கனும் அப்புறம் தான் சமைக்க கத்துகுடுக்கனும்னு சொன்னார்..உடனே அவர் பக்கதுல ஒரு கடைக்கு போயி உன் அக்காவுக்கு என்னட பிடிக்கும் னு கேட்டாரு...நான் கார்திகா அக்காவுக்கு ரேவதினா புடிக்கும் னு சொன்ன்னேன்...உடனே நடிகை ரேவதி கையில விளக்கு வச்சுகிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன வாழ்த்து அட்டையை கூடவே அவரே அரச்சு வச்ச கொஞ்சம் மருதாணியும் குடுத்து அனுப்ப ,அதை பத்திரமாக கார்த்திகா கிட்ட குடுத்துட்டேன்...அந்த சோடா கம்பெனி கதவுல ஒட்டி ரசிச்சுகிட்டே இருக்கும்,,,,,ஆனால் ஒரு நாள் கூட அவர்களுக்குள் பரிமாறப்பட்ட கடித்தத்தை நான் பிரித்து பாத்தது இல்லை.....இப்போதெல்லாம் பின் இரவுகளை தாண்டி வரும் குட் நைட் எஸ் எம் எஸ் களில் கார்த்திகாவின் காதலும் வளர்ந்திருந்தால் என் போன்றவர்கள் தேவை பட்டிருக்க் மாட்டார்கள்...

பரிச்சை முடிஞ்சு திரும்பவும் நான் போயி லெட்டெர் குடுக்க ஆரம்பிச்சேன்.....அன்னைக்கு ரூம் பூட்டி கிடந்துச்சு...அக்கா குடுத்த ல்ட்ட்ர பத்திர்மா கொண்டு படிக்கட்டுல இறங்கினது தான் தாமதம்....கார்திகாவின் சோடா கடைக்கு தவனை வசூலிப்பவன் என்னடா இங்க ன்ன பன்னிகிட்டு இருக்க? கையில ன்ன னு கெட்டான் அந்த மீசைக்காரான்...ஒன்னும் இல்லைனு சொல்லிட்டு வந்துடேன்...நேரா வந்து அக்கா அந்த லெட்டர உங்க கடைக்கு தவனை குடுக்குற ஆளு வாங்கிட்டருக்கா னு நா சொல்லிகிட்டு இருக்கும்போதே பொல பொல வென அழுதுக்கிட்டே சொன்னா விடுடா பார்த்துக்கலாம் னு......அக்கா அழுகாத அக்கா னு நா என்னால முடிஞ்சவரைக்கும் சொன்னேன்...என் அக்கா கிட்டயும் நடந்தத சொன்னேன்....... அவளும் பதறிப்போனாள்....

மறுநாள் வெள்ளயம்மாளின் குடும்ப ஆட்கள் என் பெரியம்மா கூட சண்ட போட ஆரம்பிச்சுட்டாங்க....என்னய பார்த்து "முளைச்சு 3 இலை விடல இத்ல்லாம் மாமா வேல பார்க்குதுனு".....எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாமல் என் பெரியம்மாவின் முந்தானைக்குள் என்னை மறைத்துக்கொண்டேன்.....அதன் பின் கோடை விடுமறைக்கு என் அம்மா என்னய மதுரைக்கு கூட்டி போயிட்டாங்க.....
ரெண்டு மாசத்துக்கு அப்புறம் திரும்பவும் ஊருக்கு போனேன்,,,சோடாகம்பெனி பேன்சி ஸ்டோராக உருமாறியிருந்தது....
அந்த புது பேன்ஸி ஸ்டோரில் கூட நடிகை ரேவதியின் படம் தான்
வரஞ்சுருந்தாங்க.எனக்கு ஒன்னுமே தெரியல.....என் அக்கா கிட்ட கேட்டேன்,,,கார்த்திகா அக்கா எங்க னு..? அவ செத்து போயி ஒன்னரை மாசம் ஆச்சு...எல்லாரும் வீட்டை காலி பன்னிட்டு வேற ஊருக்கு போயிட்டாங்க னு .என்னா ஆச்சுக்கா னு கேட்டென்..அந்த ராஜாவ கார்த்திகா சித்தப்பாவும் மாமாவும் அடிச்சு மிரட்டிட்டாங்க….அதுக்கப்பறம் அவன் என்ன ஆனான் னே தெரியல.,,இவ வீட்டுலலா கல்யாணத்துக்கு மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க..அப்போ அவ சித்தப்பா சொல்லிருக்காரு இன்னும் அந்த பயல நெனச்சுகிட்டு இருக்காத அவன் இப்போ மண்ணுக்குள்ள இருப்பான் நீ அழுதாலும் அவனுக்கு கேட்காது னு சொல்லிருக்காரு...அதனால் சோடா கம்பெனியில தீ வச்சுக்கிட்டா ...வெளியில எல்லார் கிட்டயும் ,சோடா சுத்தும் போது சிலிண்டர் வெடிச்சுருச்சுனு சொல்லிட்டாங்கனு சொல்லி அழுக ஆரம்பிச்சுட்டா,,
அவளோட கண்ணீரும் சிரிப்பும் ராஜாவுக்கு கேட்கனும்ங்கறதுக்காக அப்படி செஞ்சாளா? இப்படித்தான் காதல் னு தெரியாமலே காதலுக்கு புறா வா தூது போயி ஒரு பொணந்திண்ணி கழுகாக மாறிப்போனேன்….அப்போது தான் நான் சகுனிகளுக்கெல்லாம் சகுனியாக இருந்த்திருக்க கூடும்…ஒருவேள இப்போ இருக்கிறமாதிரியே அப்போவும் செல்போன் எல்லாம் இருந்துச்சுனா அடிக்கடி குண்டு கேட்க போயிருந்தா நான் அவளுக்கும் சகுனியாகவே தெரிஞ்சுருப்பேனோ?.....எது எப்படியோ அவள் பெயரைப்போலவே அவள் மரணத்தின் உன்மையும் யாருக்கும் தெரியைல்லை.... பேருந்தில் சன்னலோர பயணம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது…ஆனால் குண்டும் குழியுமான கிராமத்து சாலைகளில் எதிரே வரும் வண்டிக்காக வழிவிடும் போது சாலையின் கருவேல மரங்களுக்கு நடுவே பயணம் செய்யும் போது சன்னல் பயனத்தை ரசிப்பவன் யாரும் இருக்க முடியாது…இப்போதெல்லாம் எந்த கடைகளிலும் குண்டு சோடா தென்படுவதில்லை.அப்படியே அபூர்வமாக தெரிந்தாலும் அதை பார்க்கும் போதெல்லாம் வெள்ளையம்மாள் மட்டுமே சட்டென வந்து போகிறாள்...என் நண்பனின் காதலி சொன்னது போல் நான் சகுனியாக கூட இருந்துவிட்டு போகிறேன் ஆனால் இனிமேலும் அனுமார் போல் ஆவதுக்கு எனக்கு தைரியம் இல்லை….

Friday, April 16, 2010

என் ரயில் பயணம்

கொட்டாம்பட்டி பாஸஞ்சர்

8 ஆவது வரைக்கும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்த ரமேஷ் சொல்வான் , "எங்க மாமா ரயில்வே வேல பார்கிறதால எங்க அக்காவுக்கு டிக்கெட் free, அதனால இந்த முழு பரீட்சை லீவுக்கு நான் பாலக்காடு போறேன்டா" னு . என் பக்கத்துக்கு மாமா வோ தூரத்து மாமா வோ ,அதிக பட்சம் அழகர்கோவிலையும் அதனை அடுத்த மேலூரையும் தாண்டியது கிடையாது .அதனாலேயே 20 வருஷம் வரை ரயில் பயணம் என்பது , "அங்க பாரு ஏரோ பிளேன் போகுது " னு வேடிக்கை பார்க்கிற மாதிரி தான் எனக்கும் இருந்தது ..

ராஜாஜி பூங்கா வுல ஆரம்பிச்சு சித்திரை பொருட்காட்சி னு எங்க போனாலும் ரயில் வண்டில போகணும்னு தான் தோனுச்சு ....அப்போ எல்லாம் அரைபாடி லாரிதான் அதிகமா இருக்கும் ...asshok leyland லாரி முகத்தை பார்த்தா மட்டும் சிங்கம் முறைக்கிற மாதிரி இருக்கும் ...ஆனால் பார்க்லையும் பொருட்காட்சியிலையும் ரயில் பார்க்கும்போது மயில், வாத்து முகம் வரைஞ்சதலோ என்னவோ சீக்கிரம் பிடித்து போய்விட்டது ரயில். ..ஆண்டு விழா னு வந்துட்டாலே யாராச்சும் மிமிக்ரி செய்யும்போது கண்டிப்பா ரயில் போற மாதிரி குரல் இல்லாம இருக்காது ...plus one படிக்கறப்ப பள்ளிக்கூடம் முடிஞ்சா பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏறுனா உட்கார்ந்து கிட்டே போயிறலாம் , ஆனால் நடந்து வந்து சேதுபதி ஸ்கூல்ல தான் பஸ் ஏறுவோம் ...அங்க ஆரம்பிச்சு மீனாக்ஷி பஜார் வரைக்கும் ஜங்ஷன் மதிற் சுவர பார்த்துகிட்டே வருவோம். எத்தனை ரயில் இருக்கு , எத்தனை பெட்டி இருக்குனு .இப்படித்தான் ரயில் பயணம் செய்யாமலே அதன் மீதான ஒரு பிடிப்பு தொடர ஆரம்பித்தது . சினிமா கதாநாயகிகள் மீது ஏற்படுவதை போல ....

படித்துகொண்டிருக்கும்போது ஒரு வார பத்திரிகையில் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு வர சொல்லி இருந்தார்கள் சென்னைக்கு ...பயண செலவு நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்ற அட்டையுடன் லெட்டர் வந்தது .. முதன்முறையாக 2007 ஜீன் மாதம், ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க தெரியாமலும் எந்த ரயில் போகணும்னு தெரியாமலும் ஒண்ணுமே தெரியாத நானும் .. எரிச்சலோடு டிக்கெட் கொடுத்துகொண்டிருந்த பெண்ணும் ,,,, ’பாண்டியன் ல வைடிங் 180 , நெல்லை போற்றலாம?’ என்றார் .....நான், ’எதுக்கு திருநெல்வேலி போகணும் திருநெல்வேலி சுத்தி போனா லேட் ஆகிடும்னு சொன்னதும் அந்த பொண்ணு என்கிட்டே கேட்ட கேள்வி "என்ன படிக்கிறீங்க ". காலேஜ் னு நா சொல்லவும் ," தயவு செஞ்சு வெளில சொல்லிரதீங்கனு "சொல்லிட்டு டிக்கெட் குடுத்துருச்சு. ...(அதன் பிறகு அதிக முறை ரயில்வே ஸ்டேஷன் போகும்போது தான் தோன்றியது அங்க வேல பார்கிற 100 க்கு 80 பேர் யார் மேலயாவது எரிஞ்சு விழுவாங்கன்னு )அவமானமாகத்தான் இருந்தது , இருந்தும் தொடர ஆரம்பித்தது ரயில் மீதான ஒரு ஈடுபாடு , கசாப்பு கடைக்காரர் குடுக்கிற கீரைக்காக காத்திருக்குற ஆடு மாதிரி.

ரயில் ஏற்றுவதற்காக நண்பன் வந்தபோது ,கண்ணு முன்னாலேயே ரயில் நகர்ந்தது ,,,,"டேய் பாலா ட்ரெயின் போகுது போகுது" கத்தத்தான் முடிஞ்சது ...டேய் இது ஒன்னும் பஸ் இல்ல வண்டில overtake பண்ணி வாடிப்பட்டியில ஏறுரதுக்கு ,அடுத்து தூத்துக்குடி வண்டி வரும் .அன் ரிசர்வ் , அதுலயாவது ஒழுங்கா ஊருக்கு போடா" னு சொல்லிட்டு போய்ட்டான் ..ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணுனான் என்னடா இடம் கிடச்சதானு ...’இல்ல மாப்ள’ னு நான் சொல்லவும் , ’விடுடா பாரதிராஜா லாம் வித் அவுட் ல நின்னுக்கிட்டுதான் போனாருன்னு ஒரு புக் ல படிச்ருக்கிறேன் னு சொல்லிட்டு வச்சிட்டான்’ ..அப்போதான் தெரிந்தது ஏன் பள்ளிக்கூடத்து புங்க மரத்துல தண்டவாள துண்டை bell அடிக்க வச்சாங்கன்னு ... ...சின்ன தண்டவாள இரும்பு துண்டுல இன்னொரு இரும்பு உரசுரது பயம் தான் ...லேட் ஆனன பி.டி. சார் அடிப்பாருனு அவசர அவசரமா போயிருக்கேன். வாத்தியார் நேரம் தவறலாம்.மாணவண் தவறமுடியாது.ரயில் நேரம் தவறலாம்.பயணி நேரம் தவறமுடியாது.
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல 8 மணி நேரம் நின்னுகிட்டே போனபோது கால் வலிக்கல ...அப்ப்பாடா நம்ம வம்சத்துலையே முதல் ஆளா ரயில் ல வந்துட்டோம் னு நினைச்சு .அதுக்கு முன்னால அப்பா பெரியப்பா எல்ல்லாம் எதாவது வேலை னு சென்னை போன லாரி புடிச்சு போயிட்டு வந்ததாய் சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறேன் ...இப்படித்தான் என் முதல் ரயில் பயணம் தொடங்கியது .முதல் பயணத்தில் எல்லோரும் ரயிலை அனுபவித்தது போல் எனக்கு அனுபவிக்க தெரியவில்லை ...ஆச்சர்யம் தன அதிகமானது .... ஏதோ தடக் தடக் னு ஓடும் போது குழந்தைகளை ஆட்டும் தொட்டில் போலத்தான் தெரிந்தது ..அதில் உறங்கும் குழந்தையாய் என்னையும் பாவித்துகொண்டுதான் அன்றைய பயணம் கழிந்தது . ..

அதற்கு பிறகு எனக்கு ரயில் பயணம் அதிகமானது ..... சின்னசாமி தேவர் தோப்பு கிணத்துக்கு குளிக்க போறப்ப போகுற ஒத்தயடி பாதை மாதிரி நீண்டு கொண்டே இருந்த ரயில் பெட்டிகள்.....கோலங்கள் கதை கேட்பதற்காக மட்டுமே அடுத்த வீட்டு கதவை தட்டும் சூழலில் எல்லோருடைய முகத்தையும் பார்த்துகொண்டு பயணிப்பின் சுகம்.. ...எல்லோருடயு முகத்திலும் ஏதோ ஒரு யுத்தத்தை எதிர் நோக்க போவதற்கான வெறி ..... பக்கத்துல உட்கர்ந்துருக்குற குழந்தைகிட்ட ," மாமா கிட்ட வாட செல்லம் ...உனக்கு பொம்மை வேணுமா ? ஐஸ் வேணுமா ?" என குட்டி பாப்பா மூலமாக பெரிய பாப்பாவுக்கு தூது விடும் இளைஞன் இப்படி ..
ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனும் எனக்கு வித்யாசமா தெரிஞ்சுது ..... பேறு காலத்துக்காக மனைவிய ரயிலனுப்ப வந்த புருஷன் .அப்போது வெளிப்பட்ட அன்பு . இன்னொரு வீட்டுக்கு விலை பேசப்பட்ட பெண் .கல்யாணம் ஆன 3 வது நாளுல அந்த வீட்டுக்கு போகும்போது பெத்தவங்கள பிரிஞ்சப்ப அழுத அழுகை ,ஒரு பக்கம் புட் பால் மேச்சல ஜெயச்சுட்டு கோப்பையோட சந்தோஷத்த கொண்டாடுன காலேஜ் பசங்க ,வீட்டுல கோவிச்சுகிட்டு வீட்டுக்கு தெரியாம மெட்ராசுக்கு ரயிலேறிய சிறுவன் ... நம்பிக்கையும் திறமையையும் வச்சுக்கிட்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சாலை ஓரங்களில் அழகு பொம்மைகள் செய்யும் வடமாநிலத்தவர்கள் , "என்னப்பா இப்பதான் கூடல் நகர் ல கிராசிங் போட்டன் திரும்பவும் கொடை ரோட்ல போட்டுட்டான்" என யாரோ ஆரம்பிக்க அதனை தொடர்ந்து நீண்ட அது சம்பந்தமான பேச்சுக்கள்...
ரயில் முழுக்க சாப்பாட்டு பரிமாறுனாலும் இன்னும் எதாவது மூலையில உட்கார்ந்து சாப்பிடும் வென்டர்கள் ..டிக்கெட் இல்லாம வந்தவங்க கிட்ட கோபம் காட்டுன டீ.டீ.ஆர்..
இப்படி இப்படி இப்படி சந்தோசம் துக்கம் பிரிவு கோபம் பாசம் எல்லாத்தையும் ஒரே இடத்துல ஒரே நேரத்துல நான் பார்த்தது இந்த ரயில் ல மட்டும் தான் .....இப்படி பயணிகள் ரயில் ஒரு புறம் என்றல் மற்றொரு புறம் சரக்கு ரயிலும் என்னை கடந்து சென்றது ..

மதுரைல கறிக்கடையில நானும் என தம்பியும் வேலை பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை கடை எல்லாம் கூட்டமா இருக்கும் .,....எதாவது ஒரு நாள் நான் கடைக்கு போகாம காசு கேட்டா எங்க அம்மா சொல்லும் , "வண்டி மாடு உழைச்சு விருதா மாடு திங்கவா" அப்டி னு .... உண்மையிலே என்னைய விட இந்த பழமொழி பயணிகள் ரயிலுக்கு ரொம்பவே பொருந்தும் னு நினைக்றேன் . எந்த துணையும் இல்லாம எதாவது வயக்காட்டுல திரியற சின்ன பசங்க சந்தோஷத்த மட்டும் துணையாய் கொண்டு தனியாவே பயணப்பட்டு பழகிப்போன அந்த சரக்கு ரயில் மீது ஈர்ப்பு ஏற்ப்பட்டது. இல்லை ஒரு பரிவுனு கூட சொல்லலாம் ....
பயணிகள் ரயில் மேக் அப் இல்லாத அழகி என்றால் சரக்கு ரயில் தண்டட்டி போட்ட கருப்பாயி ஆச்சி தான் ...
இத்தனை ரயில்களையும் தாண்டி வயக்காட்டுல ஊளை மூக்கோட டவுசர கையில் புடிசுகிட்டு கமலக்கண்ணன் ராமக்ரிஷன கணேசன் கிருஷ்ணவேணி (இவங்க பெயர் மட்டும்தான் நினைப்புல இருக்கு) மற்றும் பெயர் தெரியாத கூட்டத்துல , ஒன்னாவது ரெண்டாவது படிக்கும்போது நாங்க விட்ட ரயில் வண்டிதான் ரொம்ப பிடிச்ச ரயில் . பால முருகன் கோவில் ல இருந்து தெப்பக்குளம் வரைக்கும் போற அந்த 500மீ தொலைவுக்குள் பயணித்த எங்க ரயில் ஆறு ஏழு ஸ்டாப்ல நிக்கும் .....மலம்பட்டி .நோன்டிகொவில்பட்டி .கள்ளம்பட்டி வழிய கொட்டம்பட்டிவரைக்கும் போயிரும் னு சொல்லி விளையாடினோம்...ஏன்னா எங்க உலகத்துல அந்நைக்கு அந்த ஊர் மட்டும்தான்.
.வைகை இல்லேன்னா பாண்டியன் அதுவும் இல்லையின ஆயிரத்தெட்டு வண்டி ஆனால் அப்போ கடந்து போன கொட்டாம்பட்டி பாசஞ்சர் ரயில் வண்டியில் இப்போ நான் பயணம் செய்ய முடியாவிட்டாலும் அதன் நினைவு மட்டும் தடக் தடக் னு நெஞ்சுக்குள்ள போய்கிட்டு இருக்கு
- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி காட்சி
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_13.html


Wednesday, April 7, 2010

ரகசியம்

அண்ணே நல்லா இருக்கியா? -தங்கச்சி
நேரத்துக்கு சாப்பிடுறயா? இது அம்மா
வேலை எல்லாம் எப்படிப்பா இருக்கு ? இது அப்பா
ஏண்டா வாரத்துக்கு ரெண்டு நாள் ஆவது
போன் பேசலாமே? - காதலி
கஷ்டமா இருக்காடா ? இது நண்பன்
என் கல்யாணத்துக்காவது வருவையா டா ?இது தோழி
தொலை தூர பயணத்தில்
வேலை பார்ப்பவனிடம்
கேட்கப்படும் கேள்விகளுக்கு
ஈமெயில் செல்போன் மூலம்
ஏதேதோ பதில்கள் சொல்லப்பட்டாலும்
அவனவன் டிரங்குபெட்டிக்குள்
பத்திரப்படுத்தப்பட்ட
சில பாஸ் போர்ட் சைஸ் போட்டோக்களிடமும் ,
எழுதி எழுதி அனுப்பப்படாமலிருக்கும்
கடிதங்களிடமும் மட்டுமே
இது போன்ற கேள்விகளுக்கான
நேர்மையான பதில் சொல்லப்படுகிறது ........

Monday, April 5, 2010

தேநீர்தானம்



மார்கழி மாத முருகன் கோவிலின்
அதிகாலை பொங்கலை போல ,
ஞாயிற்றுக்கிழமை தவிர
மற்ற நாட்களில் ,
எல்லா பேருந்து நிறுத்தத்தின்
டீக்கடைகளில்
காலையில் இரண்டு வடை ஒரு டீ
மாலையில் பஜ்ஜியுடன் ஒரு டீ
கிடைத்துவிடுகிறது,
காதலிக்க ஆரம்பிப்பவனின் நண்பர்களுக்கு.........

Sunday, April 4, 2010

அக்கா




பாவாடை தாவணி அணிந்து
ராணி , ராஜேஷ் குமார் நாவல்களை
படித்துவிட்டு,
முந்தைய வருட காலண்டரையோ இல்லை
பரீட்சை அட்டையை
மட்டையாக வைத்து தன் தம்பிகளுடன்
கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்த
அக்காக்களின் சந்தோஷத்தை
கோடை விடுமுறை சிறப்பு பயிற்சி முகாம்கள்
திருடிகொண்ட போது தோன்றியது
என் அக்கா இதற்கு அப்பாற்பட்டவள் என்று.,
கூடவே நானும் தான்.

Saturday, April 3, 2010

தூது


இன்னும் ஏதாவது புகை வண்டியில்
"மாமா கிட்ட வாடா செல்லம் ,
உனக்கு ice cream வேணுமா?
இல்லை பொம்மை வேணுமா?"
என குட்டி பாப்பா மூலம்
பெரிய பாப்பாக்களுக்கு
தூது சென்று கொண்டு தான் இருக்கிறது...

Thursday, April 1, 2010

நினைவு


"யாரவது நினைச்சா தான்
தும்மல் வரும் "னு
நீ சொல்லிட்டு போயிட்ட....
எனக்கு தும்மல் வரும்போதெல்லாம்
நான் உன்ன தான்
நினைச்சுகிட்டு
இருக்கேன்
முதல் தும்மலுக்கு god bless u.....
2 வது முறைக்கு devil kiss u....
மூன்றாம் முறைக்கு i miss u .....
சொல்ல நீ அருகே இல்லையென....

Tuesday, March 30, 2010

தனிமை




தனிமை காலங்களில்
காலண்டரும், கடிகாரமும்
அழகிய யுவதியின்
முரட்டு அண்ணன்
அசட்டு அப்பாவை போல் தெரிகிறதே ..