Sunday, April 13, 2014

மேன்ஷன்ஹவுஸ்-1

மேன்ஷன் சீட்டாட்டங்களில் ஜோக்கர்கள் சீட்டுக்கட்டுகளில் ஒளிந்திருப்பதில்லை,அவை விளையாடிக்கொண்டிருக்கின்றன

Wednesday, November 9, 2011

சலிப்பு

வழக்கமான ஐஸ்கிரீம் கடையில் தான்
அன்றைய சந்திப்பும் இருந்தது.
ஏதேதோ பேசிக்கொண்டிருந்த போது
மீண்டும் அதே புள்ளியில் நீ நிறுத்தி இருந்தாய்.
ஏற்கனவே இதைப்பற்றி விவாதித்த போது
இருவருமே தோற்றுப்போயிருக்கிறோம்.
சில சமயங்களில் கோபத்தோடு யாராவது
வெளிநடப்பு செய்திருக்கிறோம்-தெரிந்தும்
இதைப்பற்றி நீ திரும்ப ஆரம்பித்ததன்
அர்த்தம் புரியவில்லை எனக்கு-ஒருவேளை
இன்றுடன் இதற்கு முடிவு கட்ட வேண்டும்
என்று கூட நீ நினைத்திருக்கலாம்…
குழந்தைகளிடம் உன் பெயர் என்ன
என தெரிந்து கொண்டே கேட்கும்
முதல் கேள்வியை போல
எப்போதும் என்னிடம் கேட்கும் அதே கேள்வி தான்
திரும்பவும் முதலாவதாகவே இருந்தது
“அப்படி என்ன உங்க ஊருல இருக்கு?” என
எங்க ஊரு கோவில் நகரம் –இது நான்
ஓ நல்லது ..அப்போ உன் சாமி யார்?-நீ
நீ தானே என் சாமி என்றேன்.
சாமி இங்கே இருக்கும்போது
அது எப்படி கோவில் நகரமாகும் என்றாய்
கல்யாணம் முடிஞ்சா சாமி இருக்க போறது
எங்க ஊருல தானே
அதனால தான் கோவில் நகரம்..
வேற என்ன? தமிழை வளர்த்த ஊரு.
தமிழை பெத்தெடுத்த திருநெல்வேலிக்காரனுகளே
பெருமை பேசுறது இல்ல என உச் கொட்ட ஆரம்பித்தாய்
புள்ளய பெத்தா மட்டும் போதுமா? வளர்க்க வேணாமா?
இன்னும் வழக்கம் போல தூங்கா நகரம்.
ஜல்லிக்கட்டு, மல்லிகை நகரம் என
நான் சொன்ன பதிலையே தான்
சொல்லிக்கொண்டிருந்தேன்..எனை
சட்டைசெய்யாதவளாய்
என் சட்டையின் ஓரம்
உன் முகம் பதித்து,”நீ
ஊர் ஊர் னு சொல்லிட்டுருக்க,நானோ
என் உலகமே நீ தான்னு இருக்கேன்”என
சொன்ன போது என் சட்டை ஈரமாகியிருந்தது..
முதன்முறை என் ஊரைப்பற்றி எனக்கே
சலிப்பு தட்டிய தருணம் அது..
கடையிலிருந்து உனை
கூட்டிக்கொண்டு வெளிவரும்போது
நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேஜையில்,
என் பக்கம் இருந்த ஐஸ்கிரீம்
இப்போது உருகிக்கொண்டிருந்தது…….

Thursday, May 12, 2011

அழகு

என்னை ஒருத்தி அழகென்று
சொல்லிவிட்டாள் என்றேன்
சட்டென்று என் தலைமுடி களைத்தாய்
உதட்டுச்சாயம் கொண்டு முகத்தில்
கோலம் கிறுக்கினாய்
உதட்டைக்கடித்து வீங்கவைத்தாய்
சித்திரை திருவிழாவின்
பாதி வேஷம் போட்ட
பபூன் போல் இருந்தேன்.
உன் வலக்கைக்கு தோதாக
என் கன்னம் இருந்த்ததால்
அஞ்சு விரலையும் பதித்து
வலிக்காமல் இருக்க
முத்தமும் குடுத்தபோது
"நான் எப்படி இருந்தாலும் ரசிப்பவள்
நீ மட்டும் தான் "என்பதை என்னால்மறுக்கமுடியாது

Tuesday, August 3, 2010

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...

அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...
நான் தான் பனியாரம். நல்லா இருக்கியா டா. நீ எனக்கு வச்ச பட்ட பேரு இன்னும் மாறவே இல்ல. எங்கடா இருக்க...? நல்லா இருக்கியா?. நமக்குள்ள அறிமுகம் ஆனதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் நானும் நண்பர்களாக இருந்ததற்கு நம் இருவரின் மாமன்கள் தான் முதற் காரணமாக இருந்தனர். என் மாமாவும் உன் மாமாவும் மேலூரில் கக்கன் நினைவுக்குழு நடத்திய கடைசி கபடி போட்டி வரை ஜெயா கபடிகுழுவின் பிரதான வீரர்கள். அவர்கள் ஆரம்பித்த நட்பு நமக்குள்ளும் தொடர ஆரம்பித்தது.


காலையில் என் வீட்டிலிருந்து நானும் உன் வீட்டிலிருந்து நீயும் கையில ரெண்டு தூக்கு வாளிய எடுத்துக்கிட்டு செக்கடியில பாரதி டீக்கடையில் காபியும் பாஸ்கரன் ஆஸ்பத்திரி பக்கத்து பருத்தி பால் கடையில பருத்திப்பாலும் வாங்கியதில் தொடங்கிய சிநேகம். எங்க வீட்டுக்கு பக்கத்துல ஐஸ் கம்பெனி அதுக்கு பக்கத்துல செட்டியார் வீடு அதுக்கு பக்கத்து வீடு உங்க வீடு.

இதை எல்லாத்தயும் விட ஒரு நாள் காவியம் மனிக்காவியம் விளயாடிய போது உன் முதுகில் லாகு சொல்லும்போது ஓங்கி அடித்ததற்கு நீ கல்லை விட்டு எறிஞ்சு என் மண்டய உடைச்சுட்ட. ரொம்ப பயந்து போயி காபி தூள் வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தவனும் நீ தான். என் மேல ”கொக்கே கொக்கெ மந்திரம் போடு ,. ரெண்டு மைனா பார்த்தா நல்லது ஒத்த மைனா பார்த்தா கெட்டது நடக்கும்,,, கொடிக்கா பழ விதைய உரிக்கும்போது சரியா அதன் தோலை உரித்தால் நினைச்சது நடக்கும் ...ஒட்டு புல்ல உடைத்து சரியா மீண்டும் இனைத்தால் பரீட்சையில பாஸ் ஆயிருவோம் என அந்த வயது நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்தவன் நீ தான்...

ரெண்டு கோடு நோட்டுல நா எழுதிட்டு வராத நாட்களில் என்ன வாய்க்குள்ள விரல விட்டு வாந்தி எடுக்க வைத்து சத்யா மிஸ் கிட்ட காப்பாத்துவதும், உன் ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டோம். அதற்கு தண்டனையாக முட்டிக்கால் போடும் போது செருப்பை குடுத்து அதன் மேல் முட்டிக்கால் போட்டதும், நாலாவது கால் பரீட்சையில கல்கத்தாவின் விமான நிலையத்தின் பெயர் டம் டம் என நான் எழுதிக்குடுத்ததை வித்யா மிஸ் பார்த்து ரெண்டு பேருக்கும் 5 மார்க் குறைத்தது, உன் தங்கச்சி இலக்கியாவ தூக்கி கொஞ்சுரதுல எனக்கும் என் மாமா மகளுக்கும் சண்டை வரும்போது அவளின் வளையலை நான் உடைப்பது உனக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்..

நாலாவது முழு பரீட்சை லீவுல நீ சூரக்குண்டு ல உன் தாத்தா வீட்டுக்கு போயிட்ட, அப்போ அங்க இருந்து எனக்கு சித்திரை வருஷ பிறப்புக்கு வாழ்த்து அட்டை அனுப்பி இருந்த, அப்போவெல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வந்தா பெரியவங்களுக்கு மட்டும் தான் லெட்டர் வரும். எனக்கு தனி ஆளா முதன் முதலில் கடிதம் வந்தது உன்கிட்ட இருந்து தான். அன்னைக்கு நா குடுத்த அலப்பறைக்கு அளவே இருக்காது எனக்கு லெட்டர் வந்துருக்கு எனக்கு லெட்டர் வந்துருக்குனு சின்ன தம்பி படத்துல எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணாம்னு சொல்ற மாதிரி வீட்டுக்குள்ள கத்திட்டு இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னால என் மாமா மகள் கூட சண்ட போட்டு அவ வளையல் நான் உடைச்சிருந்தேன். அதுக்கு பழி வாங்குவதாக நினைத்து நீ அனுப்புன லெட்டர படக்குனு பிடுங்கி கிழிச்சு போட்டுட்டா. கோபமும் அழுகையுமாய் பதிலுக்கு அவள கடிச்சு வச்சுட்டு கிழிஞ்ச லெட்டர ஒன்னு சேர்த்து உன் முகவரியை சேர்த்தேன். எம்.ராமக்கிருஷ்ணன் சின்ன சூரக்குண்டு இது மட்டும் தான் என்னால சேர்க்க முடிஞ்சது. அத வச்சிக்கிட்டு உனக்கு லெட்டர் இப்படி தான் எழுதினேன் ..

“உனக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீ எப்ப இங்க வருவ...
போன வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பொருட்காட்சி போயிட்டு வந்தோம்...
நல்லா இருத்துச்சு..
அப்புறம் என் வெல்ட் ஆனி பம்பரக்கட்டை கொண்டையில அழகு பாண்டி நங் நங் நு நாலு ஆக்கர் வச்சுட்டான்.பதிலுக்கு நானும் அவன் கட்டய பொறிச்சுட்டேன் மற்றவை நேரில்”
என எழுதிய கடிதம் சரியான முகவரி இல்லாமல் திரும்ப எனக்கே வந்துருச்சு. நீயும் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்ட,உன்ன நேருல பார்த்தே குடுத்துட்டேன்.

நாம அஞ்சாவது போக ஆரம்பிச்சதுல இருந்து உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வந்து உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போன காரணத்தால அடிக்கடி லீவு போட ஆரம்பிச்ச. அப்பா சீட்டு விளயாட போறத அம்ம கேட்டதுக்கு அடிக்கிறாரு மாமா கேட்டாலும் சண்ட போடுறாரு...என உன் தரப்பு காரணங்கள். தூர்தர்ஷன் ல ஒரு நாள் படிக்காதவன் படம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப நானும் இது மாதிரி ஓடி போக போறேன்னு நீ சொன்னது எனக்கு பெரியதாக தெரியவில்லை ....

ஒரு நாள் சஞ்சாயிகா பணம் எல்லாருக்கும் திரும்ப பட்டுவாடா செய்யப்பட்டது. எனக்கு 52 ரூபாயும் உனக்கு 62 ம் ஞாபகம். அன்னைக்கு சாயங்காலம் என் கூட நீ வீட்டுக்கு வரல “ரைஸ் மில்லுல மாவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான் அதுக்கு பிறகு இன்று வரை நீ திரும்பவே இல்லை..”

அன்று இரவு 8 மணி என்னிடம் ஆரம்பித்த உன்னை பற்றிய விசாரனை என்னிடம் .”நீ ரைஸ்மில்லுக்கு போயிட்டு வர்றத சொன்னதை உன் மாமா கிட்ட சொன்னேன். அங்கே விசாரித்ததில் நீ பையை மட்டும் அங்கே வச்சுட்டு போனதாகவும் முத்தையா அண்ணன் சொல்லி இருக்கிறார் .தொடர்ந்து சுந்தரப்பான் கண்மாய் பெரியா ஆத்துக்கால் தெப்பக்குளம் டியூஷன் மிஸ் வீடு என உன்ன தேட ஆரம்பிச்சாங்க..

உன்னை யாரும் கடத்திட்டு போயிட்டானுங்களோனு பயந்தாங்க ,ஜாதகக்கோளாறு தான் நீ ஓடி போயிட்ட எனவும்,ஜோசியக்கார்,குறி சொல்றவர் மை பார்க்குற ஆள் என எல்லா இடத்துலயும் உன்ன கண்டு பிடிக்க முயற்சித்தும் பலன் இல்லை என உன் மாமா எங்க வீட்டுல புலம்பிகிட்டு இருப்பாரு. உன் தங்கச்சி எந்த விவரமும் தெரியாம விளயாடிக்கிட்டு இருக்கும். உன் தங்கச்சி இலக்கியாவுக்கு ஆசை சாக்லேட் பேப்பரும் சாக்பீசையும் வச்சு நீ செஞ்சு குடுத்த பொம்மையை இன்னும் பத்திரமா வச்சுருக்குது டா.

நீ போனதுக்கு அப்புறம் நல்ல பாம்பும் சாரப்பாம்புமா திரிவீங்களே உன்ன விட்டுட்டு அவன் போயிட்டானா.உன்கிட்ட சொல்லாம போயிருக்க மாட்டான் டா என என்னிடம் உன்னை பற்றிய விசாரிப்புகள் நம் தெரு பையன்களிடம் இருந்தது.உனக்காகவே சீம்பால் கொண்டுவந்த கார்த்திகா மிஸ் அதன் பிறகு கொண்டு வருவதே இல்லை...

உன் அப்பாவும் எல்லா பழக்கத்தையும் விட்டுட்டதா கேள்விப்பட்டேன். ரொம்பவே மாறி இருந்தார் உன் அம்மா தான் நீ வந்துருவ வந்துருவனு புலம்பித்தவித்த அவர் நம்பிக்கை பொய்த்துபோனது. அதன் பிறகு ஒவ்வொரு மார்ச் மாதம் 8 ம் தேதியும் உன் பிறந்த நாளில் யாருக்காவது துணி எடுத்து குடுத்து உனக்கு குடுக்குற மாதிரியே காலத்தை கழிச்சிக்கிட்டு இருக்காங்க.
உன் தங்கச்சி கார்த்திகா 12 வரைக்கும் படிச்சுச்சு. இப்போதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிவகங்கை ல இருந்து மாப்பிள்ள b.sc படிச்சுட்டு சொந்தமாக காய்கறி மண்டி வச்சுருக்காப்ள. நல்ல குணம். பேரு முத்துகுமார். கல்யாணம் முடிஞ்சுருச்சு. வீட்டுக்கு வளைகாப்புக்கு வந்தப்போ பேச்சுவாக்குல உன் புள்ளைக்கு என் மடியில வச்சு காது குத்துவீங்களானு ரெண்டு பேருகிட்டயும் கேட்டேன். சொன்ன மாதிரியே ரெண்டு மாசத்துக்கு முன்னால நம் மருமகளுக்கு என் மடியில வச்சு சிவன் கோவில்ல காதணி விழா சிறப்பா நடந்துச்சு. பிள்ளைக்கு பேரு கிருஷ்ணவேனி டா.....

என் வீட்டுக்கு நான் ஒத்த புள்ள.ஒத்த குரங்காவே வளர்ந்துட்டேன். திடீர்னு இலக்கியா மப்பிள்ள எனக்கு தாய்மாமன் பதவி குடுத்து சபையில நிப்பாட்டிடாப்ள... என் வாழ்வில் சந்தோஷத்தின் போது அழுத நாட்கள் மிக குறைவு. அதில் அந்த காதணி விழாவும் ஒன்னு டா... சத்தியமா எனக்கு அழுகையும் சந்தோஷமும் இருந்துச்சு டா... என்ன, அன்னைக்கு நிலமைக்கு என் கையில 130 ரூபாய் தான் இருந்துச்சு. அவளோட அடுத்த பொறந்த நாளுக்குள்ள அரைப்பவுனுக்கு தோடு எடுத்து போடனும்னு எண்ணம் இருக்குடா..

இது எல்லாமே உன்னால எனக்கு கிடைச்ச சந்தோசம் டா நண்பா... என இதிலும் கூட ஒரு சுயநல வாதியாக தான் நான் இருந்திருக்கிறேன். எப்படி டா உனக்கு வீட்டை விட்டு ஓடி போகனும்னு தைரியம் வந்துச்சு. உன் மனசுக்கும் திறமைக்கும் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப டா. எனக்கும் என் மாமாவோட ரெண்டாவது பொண்ணுக்கும் பேசிட்டு இருக்காங்க...முடிஞ்சா இந்த கல்யாணத்துக்காவது வந்துட்டு போடா.......


இன்னும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நண்பன் “பனியாரம்”
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/08/blog-post.html

வேதியியல் ஆசானுக்கு,

வேதியியல் ஆசானுக்கு,

வணக்கம் சார், என்ன ஞாபகம் இருக்கா சார்?

பனிரெண்டாவதுல எஸ்.ரெங்கசாமி பள்ளிகூடத்து ல முதல் மதிப்பெண் வாங்கினானே..அந்த செட் தான் நான்..ஏ செக்ஷன் ல கடைசி பெஞ்சுக்கு முந்துன பெஞ்சுல நடுவுல தான் நான் உட்கார்ந்து இருப்பேன்.உங்களுக்கு என்னையப் பிடிக்காது. எனக்கும் உங்களைப் பிடிக்காது, ஏன்னா நீங்க கேட்கும் மூலக்கூறு வாய்ப்பாடுகள் பெரும்பாலும் என்னை பார்த்தே இருக்கும்...இதனால் என் இருக்கையில் இருந்து கவனிச்சதை விட வாசல் நிலைக்கதவுக்கு முட்டு கொடுத்து கிளாஸ்ஸ கவனிச்ச நாட்கள் தான் அதிகம்... மேலும் நீங்க என்ன தான் நல்லா நடத்துனாலும் சிடு சிடு னு ரொம்ப கண்டிப்பான ஆள் என்பதுதான் என் வகுப்பில் இருந்த எல்லோருடைய பொது கருத்தும். நீங்க சீக்கிரமே வேலைய விட்டு போயிரனும்னு வேண்டிக்கிட்டவனுங்கள்ள நானும் ஒருத்தன்...மத்த வகுப்பில் எப்படி எல்லாமோ நாங்க இருந்த்தாலும் உங்க கிளாஸ் ல மட்டும் நாங்க அடங்கி ஒடுங்கி தான் இருப்போம்..

எப்போவும் வியாழக்கிழமை கடைசி கிளாஸ் தெய்வானை மிஸ்ஸோட தமிழ்,,ஆனால் ஏதோ முக்கியமா நடத்தனும்னு கடன் வாக்கிட்டு அன்னைக்கு வந்தீங்க.எனக்கு பின்னால காதர், சரவணன், ராம்குமார்,என் பெஞ்சுல நான் சதீஸ், கணேசன். எனக்கு முன்னால பெஞ்சுல அசோக், சிவா. செந்தில்..திடீர்னு என் சட்டய பிடிச்சு இழுத்து கையில ஒரு துண்டு பேப்பர குடுத்தான். படிச்சு பார்த்தப்போ ”லட்சுமி தியேட்டர்ல சீன் படம் போட்டுருக்காங்க உங்க பெஞ்சுல எத்தன பேரு வர்றீங்க” அப்படியே முந்துன பெஞ்சுலயும் குடுத்து கேட்க சொல்லி இருந்தது....

அன்னைக்கு சாயங்காலம் நாங்க ஒன்பது பேருல கணேசன் வரலைன்னு சொன்னான். ஏண்டானு கேட்டதுக்கு ”வீட்டு பக்கத்துல தியேட்டர் இருக்கு வந்த்தா மாட்டிக்குவேன்னு சொன்னதும் நான் தான் சொன்னேன்.,,,மகாராணி தியேட்டர்லயும் போஸ்டர் பார்த்தேன். அங்க போகலாம் ...இன்னைக்கு போனாதான் உண்டு நாளைக்கு வெள்ளிக்கிழமை படத்தை மாத்திருவாங்க” அது மட்டுமில்ல அடுத்த வாரம் அரைப்பரீட்சை வந்துரும் எங்கயும் போக முடியாதுன்னு சொன்னதால கணேசன் வருவதும் உறுதியானது.

இளயராணி மகாராணி என ரெண்டு தியேட்டர் ஓரே காம்ப்ளக்ஸில். இளயரானியில ஒரு முன்னனி நடிகரின் படமும் மகராணியில இரவு சுந்தரிகளின் போஸ்டரும் ஒட்டி இருந்தது,,,

எந்த படத்துக்கு போனாலும் சரவணனும் காதரும் தான் டிக்கெட் வாங்குவது வழக்கம்...ஆனால் இளயராணி தியேட்டருக்கு பெண்கள் கூட்டம் வருவதால் உள்ள போக சங்கடப்பட்டு கொண்டிருந்த போது தான் “கொஞ்ச நேரம் இளயராணி வாசல்ல நிப்போம் மகாராணி கவுண்டர் திறந்ததும் உள்ள போகலாம் என உட்கார்ந்தோம்...மகாராணி கவுண்டர் திறந்ததும் இளயராணியின் வாசலில் உட்கார்ந்த பாதி கூட்டம் மகாராணி கவுண்டரை நோக்கி தான்...

பசங்க எல்லோரும் தியேட்டருக்குள்ள போயிட்டாங்க..நான் மட்டும் எனக்கான டிக்கெட்டை வாங்கிட்டு சைக்கிளை நிப்பாட்ட போன போது தான் உங்களைப் பார்த்தேன்.நீங்க இளயராணிக்கு வந்துருப்பீங்க என்னப் பார்த்தா நானும் அதுக்குதான்னு சொல்லிக்குவோம்ன்னு நினைச்சேன்...நீங்க என்னய பாத்தீங்க ஆனா பேசலை,,ஒருவேளை நீங்க என்னைய இளயராணி தியேட்டர் ரசிகனாக நினைத்திருக்கலாம்....

நான் மகாரானியில் சீட் பிடித்து உட்கார்ந்த 5 ஆவது நிமிடம் தியேட்டர் காரரின் டார்ச் வெளிச்சத்தில்நீங்க. நான் சைக்கிள் ஸ்டாண்டுல நடந்தத எல்லாம் பசங்க கிட்ட சொன்னேன்...

6.30 மனி ஆயிருந்தாலும் படம் போட்ட மாதிரி இல்ல ,ஏ ஆப்பரேட்டர் என ஆப்பரேட்டரை நோக்கி ஏக வசனக்கள் வீசியது நாங்க தான்...”வந்திருக்குறது சீன் படத்துக்கு இதுல எதுக்கு இப்படி கத்துறாங்க”ன்னு பின் இருக்கையின் முனுமுனுப்புக்கள்...

எல்லா இருக்கைகளும் நிரம்பிய பின்னர் ஒருவழியாக படம் போடப்பட்டது,,,படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தான் சரவணன் கத்த ஆரம்பிச்சான் செபாஸ்டியன் சார், கெமிஸ்ட்ரி சார் வாழ்க என.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது

”டே அவரு என்ன பார்த்துருக்காருடா நீ இப்படி கத்துனா எல்லாத்துக்கும் ரிவிட்டுதான் என நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல..”அவரும் தானே படத்துக்கு வந்துருக்காரு அதுக்கு மேல ஏதாவது ஆச்சுனா பார்த்துக்கலாம்”. மேற்கொண்டு கத்த அரம்பித்தனர் எல்லோரும். டே ஆப்பரேட்டர் பிட்டு போடுயா என அவரும் திட்டு வாங்கி கொண்டிருந்தார்...எனக்கு ரொம்ப பயமாகி இருந்தது...டே இடைவேளைக்கு அப்பறம் பிட்லாம் இல்ல என எதேதோ சொல்லி எல்லாத்தயும் கிளப்பி வீட்டுக்கு வந்த்துட்டேன்.

மறுநாள் உங்களுக்கு பயந்து நான் பள்ளிக்கூடம் வரல ..பசங்க கிட்ட விசாரிச்சதுல நீங்களும் பள்ளிகூடம் வரலைன்னு சொன்னாங்க,,,,
சனி ஞாயிறு விடுமுறை கழிந்து லேசான தைரியத்தோடு பள்ளிக்கு வந்தேன்..முதல் வகுப்பு முடிஞ்ச பத்து நிமிஷத்துல ஒருத்தன் என் பெயரை சொல்லி கிளாஸ்க்கு வந்து செபாஸ்டியன் சார் கூப்பிட்டார்னு சொல்லிட்டு போயிட்டான்,

நான் உசுர கையில புடிச்சுகிட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தேன்.எவன் எவன் அன்னைக்கு தியேட்டருக்கு வந்த்தீங்க எல்லா பயலும் இப்போ வரனும் ன்னு சொன்னீங்க. ஒன்பது பேரும் உங்க முன்னால இருந்தோம்..
ஒன்பது பேரும் ரெண்டு வரிசயில நின்னு இருந்தோம்...எனக்கு பின்னல ராம் குமார் மறைஞ்சு நின்னான்...எல்லோரும் அமைதியா இருக்க ,ராம்குமார் கம்மெண்ட் அடிக்க என்னால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்...இதை பார்த்த உங்களுக்குகு இன்னும் பல்ஸ் எகிற பளாரென உங்களின் அஞ்சு விரல்களில் மூன்றின் ரேகை என் கன்னத்தில் இருந்தது...
முடிவாக இனிமேல் இந்த மாதிரி பன்ன மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்..

சாப்பிட்டு முடிஞ்சு எல்லாரும் திரும்ப வரனும்னு சொல்லியிருந்ததால இன்னும் பிரச்சன முடியல என பயந்துகிட்டே திரும்ப மதியானம் வந்தோம்...
மதியம் நீங்க வேற மாதிரி இருந்தீங்க,,என் தோளில் கை போட்டீங்க. ”வாங்க டா” என யானைக்கல் பக்கம்,ஒரு ஜூஸ் கடைக்கு எல்லாரயும் கூட்டி போயி மிக்சர் ஜூஸ் வாங்கி குடுத்தீங்க,,,நானும் செந்திலும் ம் சர்பத் வாங்கி கொண்டோம்..

தம்பிகளா நான் உங்கள வேனும்னு அடிக்கல,நீங்க திய்யேட்டர் ல என்ன பத்தி சொன்னதுக்கு கூட அடிக்கனும்னு தோனல..

அப்பறம் எதுக்கு சார் அடிச்சீங்க நீங்களும் தானே படத்துக்கு வந்தீங்க? என செந்தில் கேட்க

டே உங்க வயசுல நானும் எவ்வளவோ சேட்டை பன்னிருக்கேன்...இந்த படம் பார்த்தது எல்லாம் பிரச்சனை இல்ல...நானும் மனுஷன் தான் நீங்களும் மனுஷன் தான் .ஆனா அப்பரேட்டரை திட்டுனது தான் என்னால எத்துக்க முடியல.. நீங்க மதுரையில எந்த எந்தத் தியேட்டர்லலாம் படம் பார்த்துருக்கீங்கன்ன கேட்டீங்க. எல்லா தியேட்டர்லயும் பார்த்துருக்கோம்ன்னு அசோக் சொன்னான். நியூ சினிமாவுல படம் பார்த்துருக்கீங்களா?ன்னு கேட்டீங்க, இல்ல சார் அந்த தியேட்டர் ல இப்ப படம் ஓட்டுறது இல்லைன்னான் செந்தில்.

”என் வீடு முனிச்சாலையில தான் ...அப்பா சகாயம் ..ஆப்பரேட்டர் சகாயம் புள்ளைனு தான் என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க...நியூ சினிமாவுல தான் வேல...எனக்கு விவரம் தெரியாத வயசுல பிலிம் ரோல் தான் எனக்கு விளயாட்டுப் பொருள்...நான் எவ்வளவோ தடவ என் அப்பாக் கூட போக முயற்சி பன்னுனேன். ஆனா அவர் கூட்டிப் போகவே மாட்டார்..ரொம்ப அடம் பிடிச்சதால ஒரு நாள் கூட்டிட்டு போனார்..மதுரை வீரன் ஓடிக்கிட்டு இருந்துச்சு திடீர்னு கரண்ட் போயிருச்சு அவன் அவன் திட்ட் ஆரம்பிச்சாங்க, ஆப்ரேட்டர் அவனே இவனேனு...எனக்கு கோபம் கோபமா வந்துச்சு...என்னால எதுவுமே பன்ன முடியல...என் அப்பா கிட்ட்ட கேட்டதுக்கு இது எல்லாம் அப்படித்தான் சல்லி பயலுக வர்ற இடம் இதுக்கு தான் உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன்..இங்க நடக்குறத பத்தி வீட்டுல அக்கா கிட்டலாம் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட போது எனக்கு வயசு பத்து இருக்கும்....

என் அம்மா கல்யானம் ஆகுறதுக்கு முன்னால திய்ட்டருக்கு போனது. என் அக்கா ரெண்டு பெரும் அவங்களுக்கு கல்யானம் ஆகற வரைக்கும் தியேட்டருக்கு போனதே இல்ல..

நீங்க எல்லாம் முன் சீட்டுல இருந்து கடைசி சீட் வரை படம் பார்த்துருப்பீங்க...ஆனா நான் ஆப்பரேட்டர் ரூம் ல இருந்து பார்த்தவன்...ஒரு சிவாஜி படம் நல்ல கூட்டம் . திடீர்னு கரண்ட் போயிருச்சு ..கூட்டத்துல ஒருத்தன் ஆப்பரேட்டர் கேபினுக்குள்ள தண்ணி குடிக்கிற டம்ளர் விட்டு எரிஞ்சான்..அது வெட்டுனதுலதான் இந்த தலும்பு...

சினிமாவும் சினிமா தியேட்டருக்கும் பொழுதுபோக்க தான் போறோம்.அங்க யார் மனசும் நோகுறா மாதிரி நடந்துக்காதீங்க”னு சொல்லிட்டு போயிட்டீங்க....
அன்னைக்கு ஜூஸ் கடையில உங்கள பாத்தது தான் கடைசி..அதன் பிறகு அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு நாங்க பள்ளிக்கு வந்த போதும் உங்கள பார்க்க முடியலை.பசங்க எல்லாம் நீங்க அரசாங்க வேல கிடைச்சு போயிட்டத நினைச்சு நிம்மதியோட சந்தோசமா இருந்தாங்க..ஆனா எங்க ஒன்பது பேருக்கு மட்டும் அது பெரிய இழப்பாக இருந்தது...

எங்க ஒன்பது பேரில் இப்போ நான் செந்தில் சரவணன் என மூன்று பேர் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம்...ஒருமுறை திருச்சி பஸ்ஸ்டாண்டில் கணேசனை பார்த்தேன். புதுகோட்டையில் செல்போன் கடை வைத்திருப்பதாக் சொன்னான்...சரவணன் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான்...உங்களை போல கதாப்பாத்திரம் கண்டிப்பா அவன் படத்துல இருக்கும்னு உங்கள பத்தி பேசும்போது சொல்லுவான்... செந்தில் ஒரு கல்லூரியில ஆசிரியராக வெலை பார்க்கிறான்..என்னதான் தொண்ட தண்ணி கிழிய கத்துனாலும் நம்ம கெமிஸ்ட்ரி மாதிரி நடத்த முடியலைனு சொல்லுவான்..

நான் இப்போ சினிமா புரெஜெக்டர் பழுது மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தில் பொறியாளனாக இருக்கிறேன்...வேலை விஷயமாக ஏதாவது தியேட்டருக்கு போனா ஆப்பரேட்டர் ரூம் வழியாக திரையை பார்க்கும்போதெல்லாம் உங்க முகம் தான் எனக்கு வரும்..எங்கப்பா ஏன் அவரு வேலைபாக்கற இடத்துக்கு என்ன கூட்டிட்டுப் போகவே இல்லைன்னு நீங்க பேசினதுக்கப்பறம்தான் புரிஞ்சுது சார்.

அன்னைக்கு ஒரு பெயருக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தோம்...நிஜமா உங்க கிட்ட நேருல பேசனும்னு நினைச்சப்போ நீங்க வேலயில இல்ல...
இப்போ கேட்குறேன் சார்.
“என்ன மன்னிச்சுருங்க சார்”

இப்படிக்கு
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்
12 03 2006

- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
http://kaattchi.blogspot.com/2010/07/4.html

Saturday, June 19, 2010

மதுரைக்கு போகாதடி...........

”என்ன நண்பா எப்ப போன் அடிச்சாலும் எடுக்க மாட்ற என்னடா ஆச்சு”..இல்ல டா ஷூட்டிங் ல இருந்தேன் னு நன்பன் சொன்னான் என்னடா சினிமா கினிமா னு சொல்ர நடிக்க ஆரம்பிச்சுட்டயா? னு கேட்டேன் ..அட நீ வேற நம்ம ஊருல சினிமா ஷூட்டிங் நடக்குனுது டா அதான் போயிட்டேன்,,ரெண்டு நாலைக்கு முன்னால கேட்டப்பவும் இத் தானடா சொன்ன...பார்த்த படத்தையே பாக்க எரிச்சலா இல்லயா ? அது வேற படம் டா இது வேற படம்...நாளைக்கு கூட தெப்பக்குளத்துல ஒரு படம்னு கார்த்தி சொன்னான்...
இதுதான் மதுரைல இருக்குற நண்பனுக்கு போன் போட்டதில் கிடைத்த பதில்... ஆம் மதுரையும் அதனை சுற்றியும் இப்பொது பத்துக்கு மேற்பட்ட தமிழ் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது....
.
மதுரையை நோக்கி படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு..
முதலில் செட் போட்டு படம் பிடித்து பின்னர் வெளிப்புறப்படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் பொள்ளாச்சியே கதியென கிடந்த தமிழ் சினிமா மதுரைக்கு எடுத்து வந்தது மகிழ்ச்சி ,வந்த்தற்கு நன்றி .... தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மதுரைக்கும் பெரும் பங்கு இருப்பதை நீங்க மரக்க மாட்டீர்கள்///வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனதும் மதுரைல எப்படி போகுதுன்னு தான் உங்கலோட எதிர்பார்ப்பு இருக்க ஆரம்பித்தது...உங்களின் இலக்கான பி மற்றும் சி செண்டர் ரசிகன் அதிகம் இருப்பதும் இங்கு தான்..
மற்ற ஊர்களை போல இங்கே பொழுதை கழிக்க பார்க்கோ பீச்சோ இல்லை..பார்த்து பழகி போன மீனாட்சி அம்மன் கோவிலும் நாயக்கர் மகாலும் தான் எங்களை சினிமா தியேட்டரை நோக்கி நடக்க வைத்தவை...பெரிய நடிகர்களின் படஙள் கூட சென்ன்னை போன்ற நகரங்களில் பகல் காட்ட்சி இரவு காட்சி என திரையிடப்பட்ட போது இங்கே சாதாரனமாக தினசரி நான்கு காட்சிகளை திரையிடுவதும் இங்கே தான்.. பெரியாஸ்பத்திரி வளாகத்தில் ஜிகினா ல எழுதி வைக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் கட் அவுட்களையே வெறிக்க பார்த்தவர்களும் இங்கே தான்,,,
சினிமா தியேட்டர்களை பொறுத்தவரை இங்கே இருக்க தங்கம் தியேட்டர் தான் ஆசியாவிலேயே பெரிய ரெண்டாவது தியேட்டர்னு உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்கள் ஆகி போன நிலையில் இங்கே மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மீண்டும் புது பொலிவு பெற தொடங்கின ,,, சுந்தரம் தியேட்டர் கனேஷ் தியேட்டர் தேவி கலைவானி ஜெயா தமிழ் இளையரானி மகாரானி என பத்தை தாண்டும்..இதற்கு உங்களின் கைம்மாறு மதுரையையும் மதுரைக்காரனையும் ஒரு கூலிப்படை அளவுக்கு சித்தரிக்க தொடங்கி விட்டிர்கள்..
மதுரை போன்ற பகுதிகளில் படப்பிடிப்புக்கு தொந்தரவு இருக்கும் என நினைத்தே இங்கு வர மறுத்த நீங்கள் இங்கே படை எடுக்க தொடங்கியதும் கிட்டத்தட்ட வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்தது போல தான்,,,,.
கும்பக்கரை தங்கையா படத்துல ஒரு பாட்டுல ஒரமா வந்துட்டு போன சோலயம்மா கிழவிக்காக அந்த படத்த பார்த்தவனுங்க எங்க ஊருக்கரன்க...ஆரம்பத்தில் மதுரையை பற்றி திரையில் நீங்கள் சொல்லும் சின்ன சின்ன வசனக்களுக்கு கை தட்டியும் ,ஏரியல் வியூவில் காட்டப்படும் கோரிப்பாளயத்து ரவுண்டானாவும் வைகை பாலமும் நான்கு கோபுரத்துக்கும் விசில் அடிக்க தொடங்கினோம்...தேசிய விருது பெற்ற ஹௌஸ்ஃபுல் படமும் இங்கே படம் பிடிச்சது தான்...ரெட் படத்த மதுரை போல செட் போட்டு எடுத்தீங்க அதுக்கே அந்த படம் மதுரைல மட்டும் அண்ணாமலை தியேட்டர்ல 90 நாள் ஓடியது... அதன் பிறகு அவ்வப்போது மதுரைக்குள்ள வர ஆரம்பிச்சீங்க தமிழ்,குத்து.தூள் என மதுரையை கதை களமாக கொண்டு எடுத்தீங்க
இப்படி கண்மாயில வர்ற அயிரை மீன் மாதிரி சீசனுக்கு வர ஆரம்பிச்ச நீங்க ..ஆனா இப்போ தலைப்பிரட்டை கிடச்சா கூட அள்ளிட்டு போயிரலாம்னு கிளம்பிட்டீங்க
அதன் பிறகு தான் கில்லி படத்துல திரும்பவும் வந்தீங்க...அப்போ எடுத்த அருவா தான் இன்னும் நீங்க கீழ வைக்கவே இல்ல...கில்லி படம் வ்ந்த போதே மதுரை வீதிகளில் அதற்கான கண்டன போஸ்டர்கள் அடிக்கப்பட்டது கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்....முத்தக்காட்சியை நம்பிய நீங்கள் மதுரையின் அருவாள் மூலமான ரத்தக்காட்சியையும் நம்ப ஆரம்பிச்சீங்க... விருமாண்டி, காதல், என தொடர்ந்தது..கூடவே டி ராஜேந்தர் தன் படங்களுக்கு ஒன்பது எழுத்த்துல பெயர் வைக்கிறமாதிரி மதுரைல படம் டுத்தா அது ஹிட் அப்படி என்கிற உங்கள் சினிமா செண்டிமெண்டும்.. அமெரிக்காவுல படம் எடுக்குற திரு கவுதம் மெனன் கூட வேட்டயாடி விளையாட ,ஏ செண்டருக்கு படம் எடுக்குற வெங்கட் பிரபு கோவாவுக்காக மதுரை வந்தனர்...
காதல் ,விருமாண்டி ,திமிரு.காளை.,மதுரை வீரன்.கூடல் நகர்,வெயில்,சிவப்பதிகாரம்,தாஸ் கருப்பசாமி குத்தகை தாரர் என்றாகி போனது....இந்த சமயத்தில் தமிழ் சினிமாவும் அழகி ஆட்டோகிராப் என யதார்த்த சினிமா பக்கம் திரும்பியது.பருத்தி வீரன் வெளியானதும் சுப்ரமனியபுரம்...இந்த ரெண்டு படத்தையும் ஏத்துகிட்டது தான் தான் தமிழ் ரசிகன் பன்னுன தப்பு..ஆட்டோவுல தூக்கி போட்டு கழுத்த அறுத்ததற்கு கை தட்டினோம் என்பதற்காக தானே அடுத்தடுத்து., நாலு நாள் வளர்ந்த தாடியுடன் ஏத்திக்கட்டிய கைலியுடன் நாளு அருவாளோடு உங்கள் படங்களுக்கு விளம்பரப்பதாகைகள் வைக்க ஆரம்பிச்சீங்க...விளைவு
செட் போட்டு எடுக்க வேண்டிய டி.வி சீரியல் கூட மதுரையில் படம் பிடிக்கப்பட்டன ..அதன் டி ஆர் பி ரேட்டும் எகிறத்தொடங்கியது.....ஆம் விஜய் டிவியின் மதுரை யும் தெக்கத்தி பொண்ணு ம் அதற்கு சான்று
மதுரை சம்பவம் ரேனிகுண்டா ஜெயங்கொண்டான் வைகை மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி, மாட்டுத்தாவனி மாத்தியோசி கோரிப்பாளையம் என சித்திரை திருவிழாவுல அழகர் கோவில் உண்டியல் களும் தேர் பவனி வரும் வீதிகளில் எல்லாம் உங்கள் கேரவன்களும் சினிமா சாதனங்களும் வளைய வந்தன,,, மதுரை நகர பகுதிகளையும் தலைப்பாக மாற்றின பெருமை(?) ....விட்டால் குட்ஷெட் தெரு(மன்னிக்கனும் இந்த பேரு வச்சா உங்களுக்கு வரி விலக்கு கிடக்காது அதனால வைக்க மாட்டீங்க)தானப்ப முதலி தெரு .வக்கீல் புது தெரு நு பேரு மண்மலை மேடு நு பேரு வச்சுருவீங்க போல..........

தூங்கா நகரம் ,மயிலு.சிக்கு புக்கு,
ஆடுகளம்,மாட்டுத்தாவனி ,
அயிரம் விளக்கு, மிளகா,பூக்கடை ரவி
இன்னும் பெயர் சூட்டாமல் மதுரை சுற்றி படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு தான் இருக்கின்றன,,,,
கிட்டத்தட்ட மதுரை ய ஒரு கொலையாளிகளின் கூடரமாகவே மாத்திட்ட்டிங்க...கேட்டா மதுரை மண்ணு இப்படித்தான்னு மதுரைக்காரனுக்கே பாடம் சொல்ல்றீங்க .வீரம் வெளஞ்ச மன்னு.பாசமானவங்கெ ஆனா மோசமானவங்கெ...நீங்க சொல்றதெல்லாம் என்னவோ உன்மை தான் ஆனால் வீரம் நு நீங்க எதை சொல்றீங்கனு தான் புரியல....வாடி வாசல் ல காளையா அவுத்து விட்டா அது திமில உசிப்பி நின்னு விளயாடும் போது அடக்குவோம் அது தான் வீரம். நீங்க வீரம் நு சொல்ற து எப்படி என்றால் மாட்டுக்கே தெரியாமல் மாட்டோட கழுத்த அறுக்குறது தான்,அதுப்போல தான் மதுரைக்காரனின் வீரம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு ஊரெல்லாம் பரப்ப ஆரம்பிச்சீங்க....அருவாளை காட்டி யதார்த்தம் நு சொல்றீங்க...ஆனால் நீங்க இங்க மையமா வச்சு எடுத்த எந்த படமும் ஒன்றுக்கு ஓன்று தொடர்பு இல்லாமல் எடுத்து எங்களை கட்டி போட்டிங்க,,ஆனால் பள்ளிகூடத்துல காய்ச்சல் வந்தாலும் தலி வலி வந்தாலும் முதல் உதவி பெட்டியில இருந்து எடுத்து குடுக்குற கால்பால் மாத்திரை மாதிரி எல்லா கதைக்கும் அருவாளை பிரதானம பயன் படுத்தா ஆரம்பிச்சீங்க,,,,மதுரைய இப்படி காட்டுனா தான் பார்க்குறாங்க நு சொல்றீங்க,,,,ஏன் வெண்ணிலா கபடி குழு நு படம் மதுரைய களமா வச்சுத்தான் அந்த படமும் 100 நாள் படம் தானே.....


இந்தாரு,,,, அவிங்கெ.. இப்படி படத்துக்காக குரல் மொழியும் உடல் மொழியும் மாத்தனும் நு ஜெயங்கொண்டான் படத்துல பாவனா மதுரை தமிழ் பேசவச்சு சர்க்கஸ் காட்டுநீங்க
,,,
சமீபத்துல வெளியான படத்தை பார்த்துட்டு ரெண்டு பேரு பேசுனது தான்...” ஏண்டா ஊருக்கே அருவா அடிக்கிறோம் நம்ம திருப்புவனத்துல கூட இவ்ளோ அருவா இல்லட நு ...”
அருவா தூக்குவதற்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்காகவே அருவாளும் வேல்கம்பும் படைக்கப்பட்டது போல கொண்டாடுனீங்க,,,,,மதுரைல வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியலயா? இல்ல மத்தவனுக்களுக்கு அருவா புடிக்க தெரியாதா?
முன்பெல்லாம் வெளியூர்ல வேல பார்க்குறா மதுரைக்காரனுக்கு தனி மரியாதை இருந்துச்சு,,,இப்போ மதுரைக்காரன பார்த்து தான் இருக்கனும் நு பேசுறாம்க்கெ...ஜல்லிக்கட்டு நடக்குறதும் இங்க தான் மல்லிகை பூவுக்கும் மதுரை தான்,,,
யாரோ சொன்ன முகவரியில மதுரைக்கு வந்தீங்க..ஆனா அவங்க போன பாதைல போறீங்களே....மதுரைக்கு படம் எடுக்க வராதீங்கனு சொல்லல...வன்முறை ய படமா எடுக்குறது உங்க தொழில்,அத செய்யாதிங்னு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமை இல்லை
ஆனால் மதுரை அப்படி கிடயாது அதனால் மதுரைய அப்படி சித்தரிக்காதீங்கனு சொல்றதுக்கு தகுதி இருக்கு,,
உங்கள் பாஷை ல சொல்லனும்னா ,நானும் மதுரைக்காரன் தான்....

Monday, June 7, 2010

திரை கடல் ஓடி ..

“தல வாழைய நாய் நக்குன கணக்கா தான் தம்பி இருக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை. தல வாழை இலைய யாரும் நறுக்க மாட்டாங்க. அப்படி நருக்குனா தானே அது நாயிக்கு போயி சேரும். அதனால அது நடக்காத ஒரு விஷயம் தான்.அது மாதிரி தான் வெளிநாட்டுக்கு போனா வேகமா சம்பாதிச்சுரலாங்கறதும்,ஆனா அப்படியெல்லாம் கிடையாது தம்பி. அறுபதாயிரம் பணத்த கட்டி இங்க வந்து 4 வருஷம் ஆச்சு, கம்பி கட்டுற வேலைக்கு வந்தேன் இப்போ குப்பை பொறுக்கி கிட்டு இருக்கேன், ஊருல இந்தவேலைனு சொல்லமுடியுமா? என சொல்லும் தர்மராஜ் அண்ணனை போலத்தான் அரபு நாடுகளில் வேலை பார்ப்பவர்களின் நிலையும்....

விசா டிக்கெட் எல்லாம் கம்பெனி குடுத்துரும்னு சொல்லவும் என்னய நான் ஒருத்தன் கிட்ட வித்துருக்கேன்னு தெரியாமலே யாருமே தெரியாத மஸ்கட்டுக்கு புறப்பட தயாரானேன். கிளம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அங்க என் கூட படிச்ச கூட்டாளி ஒருத்தன் இருக்கான் அப்டின்னு கேள்விப்பட்டு அவனுக்கு தகவல் சொன்னேன். சரிடா நீ வந்து என் கூட ரெண்டு நாள் இருந்துட்டு உன் கம்பெனிக்கு போய்ட்டுவானு சொல்லிட்டான்.
13 வயசுல தனியா பஸ்ல பயணம் போக ஆரம்பிச்சேன். மேலூர்ல என் பாட்டி என்னைய 75 ல ஏத்திவிட்டா கோரிபாளையத்துல இறங்கி 44ம் நம்பர் பஸ் புடிச்சு வீடு வருவேன். 7வது படிக்கும்போது அய்யர்பங்களால இருக்குற இளையராணி மகாராணி (இப்போதைய ஜெய தமிழ்) தியேட்டருக்கு கோகுலத்தில் சீதை பார்த்துட்டு வீட்டுல அடிவாங்குன போது தொடங்கியது தனிமையில் சைக்கிள் பயணம். 20 வயசுல முதன் முதல்ல பாத்த ரயில் பயணம். ஆனால் 22 வயசுலயே விமானத்துல போக போறோம்னு நினைச்சு கூட பார்த்ததில்லை. ரயில்ல தான் 20 வயசுல போனோம் ஆனால் இங்க சீக்கிறமே போறோம்னு நினைச்சா, என் பக்கத்துல ஃப்லைட்டுல 3 வயசு குழந்த ஈ ன்னு இளிச்சுச்சு,,,

மதுரைக்கும் திருச்சிக்குமான 3 மனி நேர பேருந்து பயணத்தை போலவே சென்னைக்கும் மஸ்கட்டுக்குமான 3500 கி மீ விமான பயணமும், விமானத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தன. அழகர் கோவிலுக்கு யாராவது வெள்ளைகாரர்கள் வந்தா டௌசரு இல்லாம விளையாடிக்கிட்டு இருக்குற என் வயசுல உள்ள எங்க ஊருக்கார பயலுகள போட்டோ புடிச்சுட்டு போவாங்க. அதனால யாரு வந்தாலும் பின்னாடியே ஓடி போறதும் அவங்க குடுக்குற பேனாவுக்கும் பென்சிலுக்கும் ன்னு அடிமையாகி திருஞ்சேன். ஊருக்குள்ள யாராவது புதுசா டி வி எஸ் 50 வாங்கிட்டா கூட ”அவனுக்கு என்ன, எல்லாம் வெளிநாட்டு பணம்”, ”சிங்கப்பூருல இருந்து கோடாலி சாப் தைலமும் கொஞ்சோண்டு செண்டு டப்பாவும் உன் மகன குடுத்துவுட சொல்லுப்பா.” இது போன்ற வார்த்தைகளை நான் எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே ஊருக்குள்ள சொல்லி கேட்டுருக்கேன். நான் காலேஜ்ல படிக்கும்போது கூட என் கூட்டாளிகளோட வீட்டுல எல்லாம் சொல்லுவாக உனக்கென்னப்பா துலுக்க வீட்டு ஆளுக வெளிநாட்டுல சம்பாதிச்சுருவீக அப்படினு.இப்படி எல்லாரும் சொல்லி சொல்லியே எனக்கு வெளிநாட்டு மீதான வெறுப்பு அதிகமானது.

என்ன மாப்புள ஷார்ஜா வா அபுதாபி யா வடிவேல் கணக்கா வழியனுப்பியவர்களும், டே ஏர் ஹோஸ்டர் எல்லாம் டௌசர் சட்டயோட தான் இருப்பாளுகடானு இன்னும் சில நண்பர்களும், மறக்காம ஃபாரீன் சரக்குலாம் குடுத்துவிடுங்கடானு ஒரு கூட்டமும்.வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி கல்யாணம் பன்னிட்டு வந்துராத டானு என்னைய வழியனுப்பிய சகாக்களின் பேச்சுக்களும் என்னை விமானம் ஏற்றியது. .

என்ன தைரியத்துல கிளம்புனேனு எனக்கே தெரியாது. தமிழ தவிற எதுவும் தெரியாது. இதற்கு முன்னால வேல பார்த்த போது கூட உயர் அதிகாரிகளுக்கு மெயில் பன்னனும்னா தோழி ஒருத்தி கிட்ட விஷயத்த சொன்னா அமெரிக்க இங்கிலீஷ் அச்சு பிழையில்லாம அனுப்பும். மெயில காபி பேஸ்ட் செஞ்சு தான் ஓட்டுனேன். அதனால் ஆங்கிலத்துல அறைகுறை...

8 வது படிக்கிறப்ப சேதுபதி ஸ்கூல்ல கட்டுரை போட்டியில என் கூட சேர்ந்து ஓ.சி.பி.எம் பள்ளி கூடத்துல ஒரு பொண்ணு எழுதுச்சு. அதற்கு கொஞ்சம் இந்தி தெரியும் என்பது அவள் பாடுன சில இந்தி பாட்ட வச்சு கண்டு புடிச்சேன். சும்மா இல்லாம அக்கா எனக்கு இந்தில ஒண்ணு ரெண்டு சொல்லி குடுனு கேட்டதுக்கு அவ சொல்லி குடுத்தா. அப்புறம் அக்கா ”சோலிக்கே பீச்சே கியா ஹை” நா என்ன அர்த்தம்னு கேட்டேன் அவ முறைச்சுட்டு போயிட்டா. அவ சொல்லி குடுத்த 5 வரைக்கும் இப்பவும் நினைப்புல இருக்கு. அது மட்டும் தான் இந்தில தெரிஞ்சது.

இரவு 11.30க்கு ஓமன் நாட்டுக்கு வந்ததும் என் நண்பனின் அறைக்கு கார்ல கூட்டிட்டு போனான். மாப்ள கார்லாம் வாங்கிட்ட என்னா வசதியானு கேட்டேன்..” இதாண்டா பட்டிக்காட்டான் முட்டாயி கடயை வேடிக்கை பார்த்த மாதிரி பார்க்க கூடாது...இங்க நம்ம ஊரு மாதிரி பஸ்லாம் கிடயாது... எல்லாமே கார் தான்..... வாடகை கார் தான்...கொஞ்ச நாள் கழிச்சு நீயும் ஒரு டாக்சி காரன்ட்ட காசு குடுத்து போட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புச்சா உன்க்கு பொண்ணு குடுக்க கியூல நிப்பாங்கனு சொல்லிட்டான். 400 கி மீ தூரத்தை 1.30 மணி நேரத்துல டாக்ஸில வந்து இறங்குனேன். இங்க எல்லாம் அப்படித்தான். காரை கரப்பான்பூச்சி மாதிரி பயவுள்ளக ஓட்டும்.

அவனது அறையில் நாலு மலையாளிகள் உட்பட 5 பேருடன் அவன் இருந்தான். எல்லாரையும் அறிமுகப்படுத்தினான். நானும் அந்த மலையாளிகளுடன் சம்சாரிக்க தொடங்கினேன். எங்கள் உரையாடல் தமிழிலேயே தொடர்ந்தது. நானும் ஆச்சர்யமாக பார்க்க தொடங்கி இருந்தேன். என் நண்பன் சொன்னான்...இங்க எவனுக்கும் தமிழ் தெரியாதுனு நினைச்சு ஏதும் திட்டிறாத இந்த ஊருல முக்கா வாசி பயலுகளுக்கு தமிழ் தெரியும் நம்ம மாதிரி ஆளுகளுக்கு தான் தமிழ் தவிர வேற ஏதும் வரமாட்டிங்குது.

அவ்வப்போது எனக்கும் மலையாளிகளுக்கும் சண்டை ஏற்பட தொடங்கியது. ஆன் என்னிடம் எந்த ஹீரோயின் புடிக்கும்னு கேட்டான் நான் சொன்ன 3 பொண்ணுங்களுமே மலையாள தேசத்து மங்கைகள். உடனே என் நண்பனை கூப்பிட்டு,கேட்டுக்கோடா எங்க ஊரு பொண்ணுங்க தான் அழகுனு சொல்ல, டக்குனு நான் சொன்னேன் எங்க ஊரு பொண்ணுங்களுக்கு அவுத்து போட்டு ஆடதெரியாதேனு, அத நல்லாவே பன்னுதுங்க மலையாள குட்டிகள்னு சொல்லவும் அவன் இப்போ எங்க ஊருல ரிலீஸ் ஆகி இருக்குற ஹேப்பி ஹஸ்பண்ட் படம் வரைக்கும் 3, 4 ஹீரோ நடிச்சதுனு சொல்லவும், எனக்கும் அவனுக்கும் அவ்வப்போது தொடங்கிய சண்டை மேலும் தொடர்ந்தது.

ரெண்டு நாள் முடிஞ்சதும் என் நண்பண் கிட்ட என்னென்ன மொழி பேசுவாங்கனு கேட்டேன். இந்தி, மலையாளம்,அரபி இதுல கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சா போதும்னு சொன்னான். எவனாவது நம்மள திட்டுறானானு தெரியாம போயிற கூடாதேனு நான் எல்லா மொழியிலும் கெட்ட வார்த்தைகளை முதலில் சொல்லிகுடுடானு கேட்க நாலு கெட்ட வார்த்தைகளையும், நன்றி மற்றும் மன்னிப்புக்கான அந்தந்த வார்த்தைகளை கற்றுக்கொடுத்தான். இப்படித்தான் எல்லாருடைய பயணமும் இருந்திருக்க கூடும்.

நான் தங்கி இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் இருப்பவர் தான் மேலே சொன்ன தர்மராஜ் அண்ணன். இங்கே வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை எனக்கு கிடைக்காததால் பதினைந்து நாட்கள் எனது அறையிலேயே முடங்கி கிடந்தேன். அப்போது அறிமுகமானவர் தான் மேலே சொன்ன தர்மராஜ். என் பக்கத்து அறைவாசி. அவர் தமிழ் என்பதும் எனக்கு தெரியாது.என்னுடய மொபைலில் நான் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் பாட்டு தான் அவர் பார்வை என் மேல் விழுந்திருக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். என்ன தம்பி எந்த ஊரு?.மதுரை என்றேன். அட நமக்கு மணப்பாறை தான்...னு சொல்லி அறிமுகமானார். எப்படி தம்பி சாப்பாடு எல்லாம், கடையில சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க சமைச்சு சாப்புடுங்க.

சமைக்க தெரியாதே.இதென்ன கம்ப சூத்திரமா வாய்க்கு ருசியா இல்லாட்டியும் வயித்துக்கு குறை இல்லாம இருக்கும் தம்பி. நான் சொல்லி தரேன்னு எனக்கு சமயல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார், நான் தமிழன் என்கிற ஒரே காரணத்தால்…

தினமும் ஈச்ச மரங்களும் சிட்டு குருவிகளும் என்னை கிண்டல் செய்வது போலவே தோணும்.. யாருமே தெரியாத இடத்தில் இப்போது தர்மராஜ் மட்டுமே என் ஆறுதல். எனக்கு வீட்டு நினைப்பாவே இருக்குது நான் ஊருக்கு போறேன் என்றேன் ஒருவாரத்தில்.

தம்பி அப்படியெல்லாம் முடிவு பன்னாதீங்க,எங்கள பாருங்க இங்க எட்டு பேரு இருக்கோம். எல்லாம் தமிழ் ஆளுக தான், என்ன ஊருல இருந்தா வெளிநாட்டுக்காரங்கனு எகத்தாளமா பேசுவாங்க. இங்க கவர்மெண்டுல காண்டிராக்டில குப்பை அள்ளிக்கிட்டு இருக்கோம். இந்தா சாயங்காலம் 7 மனிக்கு இறக்கி விட்டு போய்டுறாங்க. இதுக்கப்பறம் மணிக்கனக்குல குளிக்க காத்துகிட்டு நிக்கனும். அப்பறம் சமைச்சு சாப்பிட்டு தூங்க 11 மணி ஆயிரும். திரும்ப 4 மணிக்கு எந்திருச்சு சமைக்கனும். 5 மணிக்கு கக்கூசுல உட்க்கார்ந்தா என்ன தம்பி வரும்...?. இதெல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருந்துச்சு. அப்புறம் போக போக பழகிருச்சு. இப்படி அவரது புலம்பல்களே ஒரு கட்டத்தில் ஆறுதலாகி போனது தான் கொடுமை.

ஆமாம் அவரை போலத்தான் இன்னைக்கு அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியனின் நிலைமையும் கூட. இப்படி 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை பார்க்கும் அவரது மாத சம்பளம் 100 ரியால்கள். ஓமனின் கணக்கு படி இந்த 100 ரியால் ஒரு ஒமான் வாசியின் இரண்டு நாள் செலவு தொகை. நம்ம ஊரு கணக்கு படி 12,000. இதில் சாப்பாடு பிடித்தம் போக 8 000 முதல் 10000 வரை கிடைக்கும். காலையில் ஒரு குளிர்பானம், சிறிது ரொட்டி துண்டுகள். இரவில் தினமும் சப்பாத்தியுடனே இவர்களது வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு நான் சந்தித்த மற்றொரு நபர் பாலமுருகன். வாலிபத்தை முடிக்க போகும் நபர். இதற்கு முன்னர் துபாயில் வேலை பார்த்தாலும் இந்த மஸ்கட்டுக்கு புதியவர். என் அறையிலிருந்து 40 மீட்டரில் உள்ள தண்ணி குழாயில் தண்ணீர் பிடிக்க போகும் போது பழக்கமானவர். பாஸ்,நண்பா அண்ணண்,தம்பி என அவர் நினைக்கும் உறவுகளுக்குள் நான் மாறிப்போவேன்.

நானும் வந்த புதுசுல ஊருக்கு போகனும்னு திரிவேன். அப்படி நம்ம ஊருக்கு போயிட்டா ஊருல சும்மா திரியிற நாயிக கூட நம்ம மேல கல்லெறிஞ்சுட்டு போகும் பாஸ். வெளிநாட்டுலேயே இதெல்லாம் பொழைக்க தெரில, இதெங்க உருப்பட போகுதுனு கிண்டல் பேசுவாங்க. இந்தா அடுத்த மாசம் தம்பிக்கு பீஸ் கட்டனும். ஊர்ல ஜவுளிக்கடையில வேலை பார்த்தேன். வெளிநாட்டுல வேலை, வேகமா சம்பாதிச்சுடலாம்னு வந்தேன். அதிகம் பணம் சம்பாதிக்கனும்னு ஆசை எல்லாம் இல்ல, அப்பா விட்டு போன கடன வேகமா அடைக்கனும்னு தான் வந்தேன், கிட்ட தட்ட முடிய போகுது. எப்படியோ என் தம்பிய படிக்க வச்சசாச்சு. இனி என் பாரம் கொஞ்சம் குறையும்னு சொல்லும் பால முருகன் ஒரு கட்டுமான பணி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
தினமும் 200 மீட்டருக்கு மேல் குழி தோண்டுவது தான் அவரது பிரதான வேலை. கை காச்சு போயிருச்சு தலைவா. ஊருல பாடி பில்டரா இருந்தேன் இப்போ சத்த முழுசா எடுத்து டி பி வந்தவனாட்டம் ஆகிப் போச்சு நெஞ்சு கூடு என சொல்லும் இவரது பார்ட் டைம் வேலை இங்க உள்ள பெப்ஸி டப்பாக்களை பொறுக்கி சேர்த்து வைத்து அதன் மூலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்துட்டு சம்பளத்தை மணிஆர்டர் செய்வது தான்.

இங்க இப்படி வேலை பாக்குறத ஊருல இருந்த 5 ஏக்கருல பார்த்துருந்தா சொத்தாவது மிஞ்சி இருக்கும் தம்பி. நிலத்த வித்துட்டு இங்க வந்தேன் என சொல்லும் சேகர் அண்ணன் பெரம்பலூர் காரர். இப்போ லீவுக்கு ஊருக்கு போனா கூட 20000 ரூபா வேணும். அக்கா புள்ள தங்கச்சி புள்ளனு எல்லாத்துக்கும் ஏதாச்சும் வாங்கிட்டு போகனும்.இல்லைனா அதுக்கும் சண்ட போட ஆரம்பிச்சுருவாங்க. வெளிநாட்டுல இருந்து கைய வீசிட்டு வந்துட்டான்னு. அடுத்த மாசம் ஊருக்கு போறேன் எதுவும் குடுத்து விடனும்னா சொல்லுங்க குடுக்குறேன் இனி மேல் வெளிநாட்ட நினைக்க கூட மாட்டேன் தம்பி.

ஒரு ஓட்டலில் எனது உடை அமைப்பை பார்த்து அறிமுகமானவர் தான் நண்பர் சுரேஷ். சார் மதுரையானு கேட்டார். ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க?.
நம்ம ஊருகாரங்க மெட்ராசுக்கு போனா மஞ்ச பை, வெளிநாட்டுக்கு போனா பூட்கட் பேண்ட் என அறிமுகமாகி ஒரு நாள் வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரோட வீட்டுக்கு போனேன், ஜெயகாந்தன் சுந்தர ராமசாமியின் என தமிழ் இலக்கிய புத்தகங்கள் இருந்தன.

வேர ஒண்ணுமில்ல நமக்கு சினிமா இயக்குநர் ஆகனும்னு கனவு பாஸ், இன்ஜினியரிங் முடிச்சுட்டு அங்க போறதுக்கு ரொம்பவே எதிர்ப்பு. வீட்டுலயும் கொஞ்சம் கடன்.இங்க வர்றதுக்கு முன்னால சான்ஸ் கேட்டு சுத்துனேன்.சான்ஸ் கிடைக்கிற நேரத்துல இங்க வர வேண்டிய சூழல். வந்துட்டேன்.வீட்டுலையும் ரெண்டு வருஷத்துக்கு பிறகு சேர்ந்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ரெண்டு வருஷம் முடிய போகுது. ஊருக்குபோக போறேன் அடுத்த மாசம் திரும்பவும் ஆரம்பிக்கனும்.

நாம என்ன ஹீரோவா சார்.இந்த வயசுக்குள்ள நடிக்கனும்னு, ஹாலிவுட்ல எல்லாம் 40 வயசுல தன சார் டைரக்ட் பன்றாங்க.ஆனால் ஒன்னு சார் தமிழ் சினிமாவுல உப்புமா கம்பனில கூட வேலை பார்த்துரலாம் இனிமேல் இந்தவெளிநாட்டநினைச்சு கூட பார்க்க கூடாதுங்க.ஆனால் இந்த மலையாளிகள் எங்க போனாலும் இருக்காங்க. இவனுங்கள எல்லாம் வேலை கிடையாதுனு அனுப்பிச்சா தங்குறதுக்கு அவனுங்க ஊருல இடம் பத்தாது சார்னு சொல்ல நானும் விடைபெற்றேன்.

தினத்தந்தி குருவியார் வாரமலர் ஆகியவற்றில் படித்த நியாபகம். கேட்க கூடாதது நடிகைகளின் சம்பளமும் நடிகர்களின் வயதுமாம். தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். கேட்கக்கூடாதது வெளிநாட்டில் இருப்பவனது வேலையும் தான்.

- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_07.html