வழக்கமான ஐஸ்கிரீம் கடையில் தான்
அன்றைய சந்திப்பும் இருந்தது.
ஏதேதோ பேசிக்கொண்டிருந்த போது
மீண்டும் அதே புள்ளியில் நீ நிறுத்தி இருந்தாய்.
ஏற்கனவே இதைப்பற்றி விவாதித்த போது
இருவருமே தோற்றுப்போயிருக்கிறோம்.
சில சமயங்களில் கோபத்தோடு யாராவது
வெளிநடப்பு செய்திருக்கிறோம்-தெரிந்தும்
இதைப்பற்றி நீ திரும்ப ஆரம்பித்ததன்
அர்த்தம் புரியவில்லை எனக்கு-ஒருவேளை
இன்றுடன் இதற்கு முடிவு கட்ட வேண்டும்
என்று கூட நீ நினைத்திருக்கலாம்…
குழந்தைகளிடம் உன் பெயர் என்ன
என தெரிந்து கொண்டே கேட்கும்
முதல் கேள்வியை போல
எப்போதும் என்னிடம் கேட்கும் அதே கேள்வி தான்
திரும்பவும் முதலாவதாகவே இருந்தது
“அப்படி என்ன உங்க ஊருல இருக்கு?” என
எங்க ஊரு கோவில் நகரம் –இது நான்
ஓ நல்லது ..அப்போ உன் சாமி யார்?-நீ
நீ தானே என் சாமி என்றேன்.
சாமி இங்கே இருக்கும்போது
அது எப்படி கோவில் நகரமாகும் என்றாய்
கல்யாணம் முடிஞ்சா சாமி இருக்க போறது
எங்க ஊருல தானே
அதனால தான் கோவில் நகரம்..
வேற என்ன? தமிழை வளர்த்த ஊரு.
தமிழை பெத்தெடுத்த திருநெல்வேலிக்காரனுகளே
பெருமை பேசுறது இல்ல என உச் கொட்ட ஆரம்பித்தாய்
புள்ளய பெத்தா மட்டும் போதுமா? வளர்க்க வேணாமா?
இன்னும் வழக்கம் போல தூங்கா நகரம்.
ஜல்லிக்கட்டு, மல்லிகை நகரம் என
நான் சொன்ன பதிலையே தான்
சொல்லிக்கொண்டிருந்தேன்..எனை
சட்டைசெய்யாதவளாய்
என் சட்டையின் ஓரம்
உன் முகம் பதித்து,”நீ
ஊர் ஊர் னு சொல்லிட்டுருக்க,நானோ
என் உலகமே நீ தான்னு இருக்கேன்”என
சொன்ன போது என் சட்டை ஈரமாகியிருந்தது..
முதன்முறை என் ஊரைப்பற்றி எனக்கே
சலிப்பு தட்டிய தருணம் அது..
கடையிலிருந்து உனை
கூட்டிக்கொண்டு வெளிவரும்போது
நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேஜையில்,
என் பக்கம் இருந்த ஐஸ்கிரீம்
இப்போது உருகிக்கொண்டிருந்தது…….
Wednesday, November 9, 2011
Subscribe to:
Comments (Atom)
